நியூயார்க் சதுக்கத்தில் கத்திக்குத்து: பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர் உயிரிழப்பு
Bank of America Vice President Killed in Times Square: டைம்ஸ் சதுக்கத்தில் கொல்லப்பட்டது பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர் எரின் பியாசென்டி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர்
நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த திடீர் கத்திக்குத்து தாக்குதலில் மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பி இருந்த பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர் எரின் பியாசென்டி(Erin Piacenti:, 32 வயது) பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்.
டைம்ஸ் சதுக்கத்தின் காவல் நிலையம் அமைந்துள்ள பாதுகாப்பு நிறைந்த இடத்தில், குயின்ஸ் பகுதியை சேர்ந்த 49 வயது சிஸ்னெரோஸ் என்ற பெண் தன்னுடைய ஷாப்பிங் பையில் இருந்த இரண்டு கத்தியை எடுத்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

முதலில் 68 வயது முதியவரை தாக்கிய சிஸ்னெரோஸ், பின்னர் எரின் பியாசென்டி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
காவல்துறையினர் மின் அதிர்ச்சியை பயன்படுத்தி தாக்குதல்தாரியை கட்டுப்படுத்த முயன்றனர்.
இருப்பினும் அந்த பெண் கத்தியை கீழே போட மறுத்ததால் பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸார் தாக்குதல்தாரியான சிஸ்னெரோஸை சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவத்தில் தாக்குதல்தாரிக்கு எந்தவொரு பின் நோக்கங்களும் இல்லை என்றும், அவர் நீண்ட நாட்களாக மனநல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்ததாகவும் காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினர் விளக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த 68 வயது முதியவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பணி திரும்பிய துணைத் தலைவர்
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர் எரின் பியாசென்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தன்னுடைய 5 மாத மகப்பேறு விடுமுறையை முடித்துவிட்டு பணிக்கு திரும்பியுள்ளார்.
சமீபத்திய தன்னுடைய மகளின் ஞானஸ்நானம் மற்றும் தங்களுடைய இரண்டாவது திருமண நாள் கொண்டாட்டம் தொடர்புடைய மகிழ்ச்சியான குடும்ப புகைப்படம் ஒன்றை எரின் பியாசென்டி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |