தடை செய்யப்பட்ட ரஷ்ய பெட்ரோலில் இயங்கும் கனேடிய வாகனங்கள்: எப்படி சாத்தியம்?
கனேடிய வாகனங்களில் பல, தடை செய்யப்பட்ட ரஷ்ய பெட்ரோல் மூலம் இயங்குவதாக அதிரவைக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
மறைமுகமாக கனடாவுக்குள் நுழையும் ரஷ்ய எண்ணெய்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதும், ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்யா மீது தடைகள் விதித்தன. முழு ஐரோப்பாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்தது.
ஆனால், கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்தாலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து திரவ இயற்கை எரிவாயுவை வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில், பல மில்லியன் டொலர்கள் மதிப்புடைய, தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய் கனடாவில் புழங்குவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
Sergei Karpukhin/Reuters
உக்ரைன் போர் துவங்கியபிறகு, 2.5 மில்லியன் பேரல்கள் அல்லது 250 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், அதாவது, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் கனடாவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக CBC ஊடகமும், Centre for Research on Energy and Clean Air (CREA) என்னும் அமைப்பும் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கனடா வாங்கிய எரிபொருட்கள் மூலம், ரஷ்யாவுக்கு சுமார் 100 மில்லியன் டொலர்கள் வருவாய் கிடைத்திருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், ரஷ்யாவின் கச்சா எண்ணெய், இந்தியா துருக்கி போன்ற நாடுகளில் சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதற்கு தடையும் கிடையாது. ஆகவே, அந்த எரிபொருட்களை வாங்குவது ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடையை மீறும் செயலும் அல்ல.
ஆக, இந்த வழியில், கனடாவுக்குள் தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய் மறைமுகமாக நுழைவதால், அதை தடுத்து நிறுத்தவேண்டும் என Centre for Research on Energy and Clean Air (CREA) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |