ஆளுநர் பதவியை திடீரென ராஜினாமா செய்த பன்வாரிலால் புரோகித்.., என்ன காரணம்?
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார்.
ஆம் ஆத்மி அரசுடன் மோதல்
இந்திய மாநிலமான பஞ்சாபில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் ஆம் ஆத்மி அரசு இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், ஆளுநர் பதவியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக விளக்கம் அவர் அளித்துள்ளார்.
பஞ்சாபின் ஆளுநர் பதவியில் பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்படுவதற்கு முன்பு, தமிழ்நாட்டின் ஆளுநராக செயல்பட்டார். அப்போது, அவரது பதவி காலத்தில் சில சர்ச்சைகளும் ஏற்பட்டது.
முன்னதாக, பஞ்சாப் மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, "இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பே ஆளுநர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது என்றும், அவர்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்" என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இதன்பின்னரும், பஞ்சாப் அரசு மற்றும் பன்வாரிலால் புரோகித் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த சூழ்நிலையில் தான் ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |