மரணத்திற்கு தள்ளப்படும் படுகாயமடைந்த ரஷ்ய வீரர்கள்: வெளிவரும் திகிலூட்டும் தகவல்
உக்ரைன் படையெடுப்பில் படுகாயமடைந்த டசின் கணக்கான ரஷ்ய வீரர்கள் கவனிக்கப்படாமல் மரணத்திற்கு தள்ளப்படும் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உக்ரைன் நாட்டவரான சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் குறித்த தகவலுக்கு அடிப்படையான காணொளிகளை வெளியிட்டுள்ளார். உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் படும் அவஸ்தைகளை அவர்களது உற்றார் உறவினர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என தாம் வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரஷ்ய ஊடகங்கள் உண்மை நிலையை வெளிப்படுத்துவதில்லை எனவும், விளாடிமிர் புடினுக்கு அவர்கள் அச்சப்பட்டு உண்மையை மறைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், உக்ரைன் மீதான படையெடுப்பு முழு வெற்றியை அடைந்துள்ளது எனவும், வெளியாகும் காணொளிகள் உண்மைக்கு புறம்பானது எனவும், அது ரஷ்ய தாய்மார்கள் நம்ப வேண்டாம் எனவும் விளாடிமிர் புடின் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெளியான காணொளியில், மொபைல் சவக்கிடங்கு ஒன்றில் மருத்துவ நிபுணர்கள் குழு சோதனை மேற்கொள்வதுடன், மரணமடைந்ததாக உறுதி செய்யப்படும் வீரர்கள், அவர்களின் அடையாளத்தின் அடிப்படையில் சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே மொபைல் சவக்கிடங்கில் மட்டும் 50 வீரர்களின் சடலங்கள் காணப்படுவதாகவும், அவர்கள் அனைவரும் உக்ரைனில் நாஜிகளை வேட்டையாட சென்றவர்கள் எனவும் அந்த காணொளியில் குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்ய வீரர்கள் மிக குறைவான எண்ணிக்கையிலேயே பலியானதாக நம்புபவர்களுக்காகவே இந்த காணொளியை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல உடல்கள் சிதைந்த நிலையிலும், கை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் காணப்படுவதுடன், சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாதபடி சிதைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு மாதமாக நீடிக்கும் போரில் 30,000 கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, 8 தளபதிகளும் 35 உயரதிகாரிகளும் ரஷ்ய தரப்பில் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.