பிபிசிக்கு எதிரான $10 பில்லியன் அவதூறு வழக்கு: டிரம்பிற்கு நீதிமன்றம் விதித்த காலக்கெடு
Trump to Complete Deposition by December in $10 Billion BBC Lawsuit: பிபிசி மீதான அவதூறு வழக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் டிசம்பருக்குள் வாக்குமூலம் அளிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிபிசிக்கு எதிரான அவதூறு வழக்கு
2024ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னதாக பிபிசியின் பேனோரமா(BBC Panorama) என்ற தொடரில் ஒளிபரப்பப்பட்ட Trump: A Second Chance? என்ற ஆவணப்படத்தில் டிரம்பை தவறாக சித்தரித்ததாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் $10 பில்லியன் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு பதிவு செய்தனர்.
அந்த ஆவணப்படத்தில் 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் திகதி நடந்த அமெரிக்க கேபிட்டல் கலவரம் தொடர்பாக டிரம்பின் உரையை தவறாக தொகுத்து, டிரம்புக்கு எதிராக பிபிசி சித்தரித்ததாகவும் டிரம்பின் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதில் டிரம்பை வன்முறை கிளர்ச்சியாளராக சித்தரித்து அப்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை மாற்றியமைக்க இந்த ஆவணப்படம் முயற்சித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டிரம்ப் வாக்குமூலம் அளிக்க காலக்கெடு
இந்த வழக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பதற்கான திகதியை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இது தொடர்பாக இரண்டு தரப்பு வழக்கறிஞர்களும் மாஜிஸ்திரேட் நீதிபதி என்ஜோலிக் லெட் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜராகி வாதிட்டனர்.
இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்ஜோலிக் லெட், எதிர்வரும் டிசம்பர் 11ம் திகதிக்குள் டிரம்ப் தனது நேரடி வாக்குமூலத்தை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை மதிக்காத பட்சத்தில், இந்த வழக்கையே தள்ளுபடி செய்து உத்தரவிடுவது வரையிலான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.
முன்னதாக அக்டோபர் 16ம் திகதி டிரம்ப் நேரில் வாக்குமூலம் அளிக்க இருந்த நிலையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த காரணங்களை முன்வைத்து கடைசி நேரத்தில் வாக்குமூலம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.