IPL 2025; போர் பதற்றத்தால் நாடு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் - புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ள பிசிசிஐ
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் சிலர் விளையாட முடியாத நிலையில், பிசிசிஐ புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மீண்டும் தொடங்கும் ஐபிஎல்
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர், கடந்த மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, கடந்த மே 8 ஆம் திகதி ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, ஐபிஎல் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் பலர், போர் பதற்றம் காரணமாக தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பினர்.
இந்நிலையில், இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17 தொடங்கி, ஜூன் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
சொந்த நாடுகளுக்கு சென்ற வெளிநாட்டு வீரர்கள் சிலருக்கு அந்த நாடுகளின் கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கு கொள்ள முடியாத சூழல் எழுந்துள்ளது.
இதனால், அந்த வீரர்களுக்கு மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்வதில், புதிய விதியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்காலிக மாற்று வீரர்கள்
இதன்படி, ஐபிஎல் அணிகள் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த வீரர்களை அடுத்த ஐபிஎல் தொடருக்கு தக்க வைத்து கொள்ள முடியாது.
2026 ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். ஐபிஎல் போட்டி இடைநிறுத்தப்பட்ட பின்னர் ஒப்பந்தம் செய்யப்படும் மாற்று வீரர்களுக்கு இந்த விதி பொருந்தும்.
டெல்லி அணிக்காக விளையாடும் அவுஸ்திரேலிய வீரர் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க், இந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியாததால், தற்காலிக மாற்று வீரராக வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தாபிசுர் ரஹ்மானை டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
Mustafizur Rahman is back in 💙❤️ after two years!
— Delhi Capitals (@DelhiCapitals) May 14, 2025
He replaces Jake Fraser-McGurk who is unavailable for the rest of the season. pic.twitter.com/gwJ1KHyTCH
மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஜேக்கப் பெதெல், ரொமாரியோ ஷெப்பர்ட், லுங்கி நிகிடி, ஜேமி ஓவர்டன் உள்ளிட்ட வீரர்கள் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |