ஆபரேஷன் சிந்தூர் வெற்றி; ஐபிஎல் இறுதிப்போட்டியில் இந்திய ராணுவத்தை கௌரவிக்க பிசிசிஐ திட்டம்
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில், ஐபிஎல் இறுதிப்போட்டியில் இந்திய ராணுவத்தை கௌரவிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியழித்தது.
இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் அரசு இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தானுக்கு பெரும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை கொண்டாடும் வகையில், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.
அதேபோல், இந்திய கிரிக்கெட் வாரியமும் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில், இந்திய ராணுவத்தை கௌரவிக்க திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் இறுதிப்போட்டி
இதன்படி, ஐபிஎல் இறுதிப்போட்டி நிகழ்வின் போது இந்திய ராணுவத்தை கௌரவிக்க திட்டமிட்டுள்ள பிசிசிஐ, இறுதிப்போட்டிக்கு வருமாறு முப்படை தளபதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மார்ச் 22 ஆம் திகதி தொடங்கிய 2025 ஐபிஎல் தொடர், மே 25 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, ஐபிஎல் போட்டிகள் 6 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
இதனையடுத்து, புதிய அட்டவணை வெளியிடப்பட்டு இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி மே 17 ஆம் திகதி மீண்டும் தொடங்கியது. ஜூன் 3 ஆம் திகதி, குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியின் முடிவில் நடைபெறும் நிகழ்வில் முப்படை தளபதிகளை கௌரவிக்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |