படையெடுக்கும் மூட்டைப் பூச்சிகளால் தடுமாறும் பிரான்ஸ்... பாடசாலைகள் வரிசையாக மூடல்
அதிகரிக்கும் மூட்டைப் பூச்சி தொல்லை காரணமாக பிரான்ஸில் இதுவரை 7 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
படையெடுத்துள்ள மூட்டைப் பூச்சிகள்
இதுவரை 17 கல்வி நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தற்போது வரையில் 7 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் Gabriel Attal தெரிவித்துள்ளார்.
@getty
ரக்பி உலக கிண்ணம், 2024ல் பாரிஸ் ஒலிம்பிக் ஆகிய தொடர்களை பிரான்ஸ் முன்னெடுத்து நடத்தவிருக்கும் நிலையில், தற்போது மூட்டைப் பூச்சிகள் படையெடுத்துள்ளதாக வெளியான தகவல் அதிகாரிகளை தடுமாற வைத்துள்ளது.
இந்த வாரத்தில் மட்டும் இதுவரை பல முறை ஆலோசனை கூட்டங்களை பிரான்ஸ் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் 5 பாடசாலைகள் மூட்டைப் பூச்சி தொல்லை காரணமாக மூடப்பட்டதாகவும், இதனால் 1,500 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கல்வி அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.
ஏற்கனவே, இந்த வாரத்தில் இரண்டு பாடசாலைகள் இதே காரணத்தால் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பிரான்ஸில் கிட்டத்தட்ட 60,000 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், சில டசின் கல்வி நிறுவனங்களில் மட்டுமே தற்போது மூட்டைப் பூச்சி தொல்லை தொடர்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் பாதிப்புகள் அதிகரித்து வருவது என்பது உண்மைதான் எனவும் கல்வி அமைச்சர் Gabriel Attal தெரிவித்துள்ளார்.
பத்தில் ஒரு குடும்பத்தினர்
அடையாளம் காணப்படும் கல்வி நிலையங்களை 24 மணி நேரத்திற்குள் சுத்தம் செய்யவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
@midwest
மேலும், சுகாதார அமைச்சகம் மற்றும் பிராந்திய சுகாதார அமைப்புகளுடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அடையாளம் காணப்பட்ட நிறுவனங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது, பாடசாலை நிர்வாகங்கள் அவர்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வடக்கு நகரமான அமியன்ஸில் உள்ள முனிசிபல் நூலகம் ஒன்று, பொது வாசிப்பு இடங்களில் மூட்டைப் பூச்சிகள் பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து, பல நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட உள்ளது என நகர மேயர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் அனைத்து குடும்பங்களில் பத்தில் ஒரு குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளாக மூட்டைப் பூச்சி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், வழக்கமாக பல நூறு யூரோக்கள் செலவிட வேண்டும் என்பதுடன், இது அடிக்கடி மீண்டும் செய்யப்பட வேண்டும் என்றே மக்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |