அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா
சீன விஞ்ஞானிகள் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை அழிக்க வழிகளை உருவாக்கி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தலாக
ஸ்டார்லிங் சேவைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றே சீனா கருதுகிறது. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவைகளை அமெரிக்காவால் இராணுவ மோதலிலும் உளவு பார்ப்பதிலும் பயன்படுத்தப்படும் சாத்தியக்கூறு இருப்பதாக சீனா நம்புகிறது.
உலகில் 140 நாடுகளுக்கும் மேலாக ஸ்டார்லிங் சேவைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் குறிப்பிடுகையில்,
அமெரிக்கா ஸ்டார்லிங்க் தொழில்நுட்பத்தை இராணுவ விண்வெளி விவகாரங்களில் ஒருங்கிணைக்கும்போது, மற்ற நாடுகள் அணுசக்தி, விண்வெளி மற்றும் சைபர் களங்களில் ஸ்டார்லிங்கை பாதுகாப்பு அச்சுறுத்தலாக அதிகளவில் கருதுகின்றனர் என பதிவு செய்துள்ளனர்.
மேலும், சீனாவில் ஸ்டார்லிங்க் சேவைகள் பயன்பாட்டில் இல்லை என்றாலும், அதன் செயற்கைக்கோள்கள் இன்னும் சீனப் பகுதியின் மீது பறக்கின்றன. இராணுவ ஆராய்ச்சியாளர்களிடையே எச்சரிக்கையைத் தூண்டுவதற்கு அது போதுமானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் உலகளாவிய வீச்சைக் கட்டுப்படுத்த தூதரக மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு சில நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். சீனா மட்டுமின்றி, அமெரிக்காவின் சில நட்பு நாடுகளும் ஸ்டார்லிங்க் தொடர்பில் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, எலோன் மஸ்க்கின் அரசியல் பார்வைகள் அடிக்கடி மாறுவதையே குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதி ட்ரம்புடன் தற்போது எலோன் மஸ்க் நெருக்கத்தில் இல்லை என்றாலும், நாசாவின் விண்வெளிப் பயணங்களை ஏவுதல், விண்வெளி வீரர்களை மீட்பது மற்றும் அமெரிக்க அரசாங்கத்திற்காக கண்காணிப்பு செயற்கைக்கோள்களை உருவாக்குதல் போன்ற முக்கிய ஒப்பந்தங்களை ஸ்பேஸ்எக்ஸ் தொடர்ந்து கைப்பற்றி வருகிறது.
பல ஆண்டுகள் பின்தங்கி
2022ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தபோது ஸ்டார்லிங்க் சேவை ஒரு போர்க்களக் கருவியாக மாறியது. அதன் செயற்கைக்கோள்கள் உக்ரைனுக்கு ட்ரோன்களை இயக்கவும் தகவல்தொடர்புகளைப் பராமரிக்கவும் உதவியது.
ஆனால் உக்ரைனிடம் இருந்து ரஷ்யா கைப்பற்றியுள்ள கிரிமியா பகுதியை மீட்க உக்ரைனுக்கு உதவ எலோன் மஸ்க் மறுத்துள்ளார். உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே சீன ஆராய்ச்சியாளர்கள் ஸ்டார்லிங்கை ஆய்வு செய்து எதிர்க்கும் முயற்சிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
ஸ்டார்லிங்க் தற்போது 8,000க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இயக்குகிறது, மேலும் பல்லாயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளது. ஐரோப்பா அதன் சொந்த அமைப்பான IRIS2 இல் பெருமளவில் முதலீடு செய்கிறது, ஆனால் இன்னும் பல ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறது.
சீனாவின் Guowang நிறுவனம் இதுவரை 60 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. மேலும் 13,000 செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளது. இன்னொரு சீன நிறுவனமான Qianfan இதுவரை 90 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. மேலும் 15,000 செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளது.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவை Qianfan நிறுவனம் குறிவைத்து செயல்படுகிறது. அதே வேளை எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் புதிதாக இந்தியா, பாகிஸ்தான், வியட்நாம், நைஜர் மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு நாடுகளில் களமிறங்கியுள்ளது.
சீனா, ஈரான் மற்றும் வட கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே ஸ்டார்லிங்க் தனது முயற்சியை தொடங்கவில்லை. இந்த நிலையில், லேசர் தாக்குதல்கள், தனிப்பயன் செயற்கைக்கோள்கள் மற்றும் விநியோகத்தில் நாசவேலைகளால் ஸ்டார்லிங்க் சேவையை மொத்தமாக முடக்க சீனா வழிகள் தேடி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |