ஸ்தம்பிக்கும் சீன தலைநகரம்... பேருந்து, இரயில் சேவைகள் முடக்கம்: அச்சத்தில் மக்கள்
சீன தலைநகர் பீஜிங்கில் டசின் கணக்கான ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து தடங்கள் மூடப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தலுக்கான மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஷாங்காய் நகரில் அமுலுக்கு கொண்டுவந்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் தலைநகர் பீஜிங்கிலும் அமுலுக்கு வரலாம் என்ற அச்சம் தற்போது மக்களிடையே எழுந்துள்ளது.
பீஜிங்கில் இதுவரை 60 சுரங்க ரயில் சேவை நிலையங்கள் மற்றும் 158 பேருந்து தடங்கள் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட பெரும்பாலான ரயில் நிலையங்கள் மற்றும் வழித்தடங்கள் அனைத்தும் சாயாங் மாவட்டத்தில் அமைந்துள்ளன.
ஒரே நாளில் டசின் கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே பீஜிங் நிர்வாகம் குறித்த அதிரடி முடிவுக்கு வந்துள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான ஊரடங்கு விதிகளின் கீழ் இருக்கும் ஷாங்காய் நகரம் போன்ற நிலையைத் தவிர்க்க பீஜிங் நிர்வாகம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் நகர எல்லையை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் எப்போது விலக்கிக்கொள்ளப்படும் என்பது தொடர்பான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை எனவும், மக்களின் சுதந்திரம் நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்படுவதாகவும் பீஜிங் நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.