உக்ரைனுக்கு பயந்து எல்லையில் ராணுவம் மற்றும் ஆயுதங்களை மேலும் குவிக்கும் ஐரோப்பிய நாடு
ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் தற்போது உக்ரைனுக்கு பயந்து எல்லையில் விமானங்கள், வான் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஆயுதங்கள் என குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
படைகளின் எண்ணிக்கை
அடுத்த சில நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என குறிபிட்டிருந்த பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தனது நாட்டின் ஆயுதப் படைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை உக்ரைன் எல்லைக்கு அனுப்பியதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது படைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் தெற்கு எல்லையில் அவர்கள் பணியாற்றுவார்கள் எனவும் ஜனாதிபதி லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
மேலும், விமானங்கள், விமானத் தடுப்பு ஏவுகணைகள், தொழில்நுட்ப வீரர்கள் பிரிவு உட்பட ஒரு தாக்குதல் நடந்தால் எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் பெலாரஸ் முன்னெடுத்துள்ளதாக லுகாஷென்கோ தெரிவித்துள்ள்ளார்.
ரஷ்ய மண்ணில் உக்ரைன் படைகள் நுழைந்து பல கிராமங்களை கைப்பற்றி வரும் நிலையில், உக்ரைனின் இந்த கடும்போக்கு நடவடிக்கை ஆபத்தை விளைவிக்கும் என கடுமையாக விமர்சித்திருந்தார் ஜனாதிபதி லுகாஷென்கோ.
லுகாஷென்கோ நாடகம்
மேலும், தங்கள் எல்லையில் 120,000 வீரர்களை உக்ரைன் குவித்துள்ளதாகவும், அவர்களின் அடுத்த இலக்கு பெலாரஸ் என தாம் நம்புவதாகவும் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
ஆனால், லுகாஷென்கோ தெரிவித்துள்ளது போன்று எல்லையில் பெலாரஸ் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை என்றும், இது ரஷ்ய ஜனாதிபதி புடினின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பும் வகையில் லுகாஷென்கோ முன்னெடுக்கும் நாடகம் என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, 2022ல் உக்ரைன் மீதான படையெடுப்புக்கு முன்னர் ரஷ்ய படைகள் பெலாரஸ் நாட்டில் நிறுத்தப்பட்டிருந்தது. ரஷ்ய பிராந்தியத்தில் அதிரடியாக உக்ரைன் படைகள் ஊடுருவியுள்ளதும், ரஷ்யாவால் இதுவரை தடுத்து நிறுத்த முடியாமல் போனதும் பெலாரஸ் ஜனாதிபதியை அச்சம்கொள்ள வைத்துள்ளது என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |