உக்ரைன் - ரஷ்யா பிரச்சனைக்கு நடுவே புகுந்த நாடு! இன்று முடிவுக்கு வருகிறதா யுத்தம்? வெளியான முக்கிய தகவல்
பெலாரஸில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதனால் யுத்தம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டிற்குள் புகுந்து ரஷ்யா 4 நாட்களுக்கு மேலாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து 5ஆவது நாளாக ரஷ்யா மிக கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் இதுவரை 3.68 லட்சம் பேர் உக்ரைனிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளார்கள் என ஐநா தெரிவித்துள்ளது.
போர் தொடங்கிய இரண்டாவது நாளே உக்ரைன் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் ஏற்படும் என ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
எனினும் உக்ரைன் சரணடைய மறுத்து தொடர்ந்து போரிட்டு வந்தது. ரஷ்யாவுக்கு உரிய பதிலடியையும் கொடுத்து வந்தது. பல முக்கிய இடங்களை ரஷ்யா கைப்பற்றியதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டு ராணுவம் பெரும்பாலான இடங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பொருளாதார தடை, உலக நாடுகள் கண்டனம், ஐநா கண்டனம் என தொடர் அழுத்தங்களால் பெலாரஸ் நாட்டில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயார் என அறிவித்தது. உக்ரைன் மீது போர் தொடுக்க பெலாரஸ் நாடு ரஷ்ய படைகளுக்கு அனுமதி கொடுத்ததால் அந்த இடத்தில் பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என உக்ரைன் மறுத்தது.
பெலாரஸுக்கு பதிலாக புட்டாபெஸ்ட், இஸ்தான்புல் உள்ளிட்ட அண்டை நாட்டின் தலைநகரங்களில் பேச்சுவார்த்தை நடத்தினால் உக்ரைன் தயார் என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இதற்கு ரஷ்யா ஒப்புக் கொள்ளவில்லை.
இதையடுத்து பெலாரஸில் வைத்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. அதன் படி இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதன் மூலம் போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையில் அணு ஆயுதங்கள் தொடர்பில் பெலாரஸ் வாக்கெடுப்பு நடத்தியது.
அந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் அரசியலமைப்பு மாற்றத்திற்கு வாக்களித்ததாக பெலாரஸ் அறிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பு நாட்டின் அணுசக்தி அல்லாத அந்தஸ்தை ரத்துசெய்து, ரஷ்ய அணு ஆயுதங்களை நாட்டில் நிலைநிறுத்துவதற்கு வழி வகுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.