நிச்சயமாக அதிர்ச்சி இருக்கிறது: ஆஷஸ் படுதோல்வி குறித்து பேசிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் படுதோல்வியடைந்தது அதிர்ச்சியாக இருந்தது என இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.
படுதோல்வி
பெர்த்தில் நடந்த ஆஷஸ் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 
இப்போட்டியில் இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் துடுப்பாட்டத்தில் சொதப்பினாலும், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
போட்டிக்கு பின் பேசிய பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), என்ன நடந்தது என்று புரிந்துகொள்ள நிச்சயமாக கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்ததாக தெரிவித்தார்.
பென் ஸ்டோக்ஸ்
மேலும் அவர் கூறுகையில், "ஆட்டம் எப்படி நடந்தது என்பதைப் பார்க்கும்போது, துடுப்பாட்ட வீரர்கள்தான் தைரியமாக வெற்றியை முன்னெடுத்து சென்றவர்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் அதிலிருந்து கொஞ்சம் விலகிச் சென்றிருக்கலாம் என்று தோன்றுகிறது.
அப்படிப்பட்ட ஒரு விக்கெட்டில், நீங்கள் போதுமான அளவு பந்து வீசிவிட்டதாக நீங்கள் ஒருபோதும் உணர மாட்டீர்கள். சுற்றித் திரிந்து கிரீஸை ஆக்கிரமிக்க முயற்சிப்பதில் எனக்கு அதிக வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால், டிராவிஸின் ஆட்டம் உண்மையில் எங்களை திக்குமுக்காட செய்தது. நாங்கள் மூன்று அல்லது நான்கு வெவ்வேறு திட்டங்களை அவருக்கு முயற்சித்தோம். ஆனால் அவர் ஒரு ரயில் போல ஓட்டங்களை எடுத்ததால் திட்டங்கள் விரைவாக மாறின.
நான்காவது இன்னிங்சை நோக்கிச் செல்லும்போது நாங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக உணர்ந்தோம். ஆனால், எங்களுக்கு இன்னும் நான்கு ஆட்டங்கள் உள்ளன.
நாங்கள் எப்போதும் செய்வதுபோல் எங்கள் வேலையை செய்வோம்; அந்த ஆட்டத்தில் இருந்து நாங்கள் விரும்புவதைப் பெற பிரிஸ்பேனுக்கு வருவோம்" என தெரிவித்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |