தேர்தல் களத்தில் இனி இல்லை... பிரித்தானிய பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் அதிரடி முடிவு
பிரித்தானிய பாதுகாப்பு செயலர் பென் வாலஸ், தாம் அரசியலில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார். உலகம் மிக ஆபத்தான பகுதியாக உருமாறி வருவதாகவும் பென் வாலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பென் வாலஸ் பதவி விலகுவார்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பென் வாலஸ் அதற்கு முன்னரே தமது பதவியை விட்டு விலகுவார் என்றே தகவல் கசிந்துள்ளது.
Credit: The Mega Agency
அத்துடன் இனி தேர்தல் களத்திலும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ரிஷி சுனக் அமைச்சரவையில் இருந்து பென் வாலஸ் விலக இருக்கிறார் என இந்த மாத துவக்கத்தில் இருந்தே தகவல் கசிந்துள்ளது.
2005ல் இருந்தே நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பில் இருக்கும் பென் வாலஸ் எடுத்துள்ள இந்த முடிவு, ரிஷி சுனக் அரசாங்கத்திற்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் தற்போது உக்ரைன் விவகாரங்களில் பிரித்தானிய ராணுவத்தை உறுதியாக வழிநடத்தியுள்ள பென் வாலஸ், 24 ஆண்டுகளாக அரசியல் களத்தில் உள்ளார்.
பிரித்தானியா ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள பென் வாலஸ், உலகம் மிகவும் பாதுகாப்பற்றதாகவும், தனித்துவிடப்பட்டது போன்ற சூழலை மக்கள் எதிர்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா அமேசான் நிறுவனமல்ல
உக்ரைன் மீதான போரில் விளாடிமிர் புடின் தோல்வியை தழுவினால், பிரித்தானியாவுக்கு இன்னும் பெரிய ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது என்றார். உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்க முடியாது என குறிப்பிட்டு, பிரித்தானியா ஒன்றும் அமேசான் நிறுவனமல்ல என ஜெலென்ஸ்கி முன்னிலையில் பென் வாலஸ் வெளிப்படையாக கூறிய கருத்து, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
ஆப்பிரிக்காவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அல்லது அல் கொய்தா அமைப்பு மறுமலர்ச்சியை காண வாய்ப்பிருப்பதாக அவர் எச்சரித்துள்ளார். மேலும், நேட்டோ அமைப்பின் அடுத்த பொதுச் செயலாளராக வாலஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்கா அவருக்கு எதிராக நின்றதால் அவரது நம்பிக்கை பொய்த்துப் போனது.
இதுவரை 40 கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் களத்தில் இருந்து தாங்கள் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், பெண் வாலஸ் அந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |