மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது
இந்தியாவின் பெங்களூருவில், மருத்துவர் ஒருவரின் மனைவி திடீரென மரணமடைந்த நிலையில், முதலில் அது இயற்கை மரணம் கருதப்பட்ட நிலையில், பின்னர், அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது, சம்பந்தப்பட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது மொபைலை ஆய்வுக்குட்படுத்தியபோது, ஒரு புதிய அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்துள்ளது.
திடீரென மரணமடைந்த மருத்துவர் மனைவி
பெங்களூருவிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிபவர் மஹேந்திர ரெட்டி (32). அவரது மனைவி, மருத்துவர் கிருத்திகா ரெட்டி (23).
திருமணமாகி ஒரு ஆண்டு கூட ஆகாத நிலையில், ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி, உடல் நலம் பாதிக்கப்பட்ட கிருத்திகா திடீரென உயிரிழந்தார்.

விஷத்தையே மருந்தாக...
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, கிருத்திகாவுக்கு வழக்கமாக ஏற்படுவதுபோல வயிற்றுப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
மனைவியை பரிசோதித்த மஹேந்திர ரெட்டி, அவருக்கு குளூக்கோஸ் ஏற்றும் குழாய் (intravenous, IV) மூலம் மருந்தொன்றைக் கொடுத்துவந்துள்ளார்.
ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி காலை, கிருத்திகா சுயநினைவிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கிருத்திகாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்கள்.
கிருத்திகாவின் அக்காவான மருத்துவர் நிகிதா ரெட்டி, தன் தங்கையின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்ப, அதன்படி உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்ட கிருத்திகா உடல் உள்ளுறுப்புகளில் Propofol என்னும் ரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த Propofol, மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின்போது மட்டுமே மயக்க மருந்தாக பயன்படுத்தப்படும் ரசாயனம் ஆகும்.
ஆக, கிருத்திகா உடல் நலம் பாதிக்கப்பட்ட ஏப்ரல் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை, மஹேந்திர ரெட்டி அவருக்கு சிகிச்சையளிப்பதாகக் கூறி, இந்த Propofolஐ மனைவியின் உடலில் ஏற்ற, அளவுக்கு அதிகமாக Propofol ஏற்றப்பட்டதால், பரிதாபமாக பலியாகியுள்ளார் கிருத்திகா.

கிருத்திகா உயிரிழந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி நகரிலுள்ள மணிப்பால் என்னுமிடத்தில்
பொலிசார் மஹேந்திர ரெட்டியைக் கைது செய்துள்ளார்கள்.
மொபைலில் சிக்கிய அதிர்ச்சியூட்டும் தகவல்
இந்நிலையில், மஹேந்திர ரெட்டியின் மொபைலை ஆய்வுக்குட்படுத்தினார்கள் தடயவியல் நிபுணர்கள்.
ஆய்வில், மஹேந்திர ரெட்டியின் மொபைலில், அவர் ஒரு பெண்ணுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
அந்த செய்தியில், ‘உனக்காகத்தான் என் மனைவியைக் கொன்றேன்’ என்று கூறியுள்ளார் மஹேந்திர ரெட்டி.
சம்பந்தப்பட்ட பெண்ணை, அதாவது, மஹேந்திர ரெட்டி அனுப்பிய செய்தியை பெற்றுக்கொண்ட, அவரது ரகசிய காதலியை கண்டுபிடித்த பொலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள். ஆனால், அவர் குறித்த எந்த அடையாளமும் வெளியிடப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |