மக்கள் இருளில் தவித்தபோது டென்னிஸ் விளையாடிய மேயர்: பறிபோகும் பதவி
ஜேர்மன் தலைநகர் பெர்லினில், 45,000 வீடுகள் இருளில் மூழ்கிய விடயம் மக்களைக் கொந்தளிக்கச் செய்த நிலையில், அதனால் மேயர் ஒருவர் தன் பதவியை இழக்க நேரிட்டுள்ளது.
இருளில் மூழ்கிய 45,000 வீடுகள்
ஜனவரி மாதம் 3ஆம் திகதி இரவு, பெர்லினிலுள்ள Lichterfelde என்னுமிடத்தில் அமைந்துள்ள மின் நிலையம் ஒன்றில் தீப்பற்றியது.

அதன் காரணமாக, தென்மேற்கு பெர்லினிலுள்ள 45,000 வீடுகளிலும், 2,200 அலுவலகங்களிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் அவதியுற நேர்ந்ததுடன், நிலைமை சீரடைய நான்கு நாட்கள் வரை காத்திருக்கவேண்டியிருந்தது.
பறிபோகும் மேயரின் பதவி
விடயம் என்னவென்றால், பெர்லின் இருளில் மூழ்கிய நேரத்தில், பெர்லின் நகர மேயரான கய் வெக்னர் ( Kai Wegner) டென்னிஸ் விளையாடச் சென்றுவிட்டாராம்.

அத்துடன், நிலைமையை சரி செய்ய தான் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக வெக்னர் கூறியிருந்த நிலையில், அவர் சொன்னதில் உண்மையில்லை, அவர் உடனடியாக தக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை என்னும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், பெர்லினில் செப்டம்பர் மாதம் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வெக்னர் மீண்டும் மேயர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என அவர் சார்ந்த CDU கட்சியினர் அவருக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார்கள்.

ஆகவே, தான் அடுத்த மேயர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என வெக்னர் தற்போது அறிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |