கடைக்குள் புகுந்து பெண்ணை பிணைக்கைதியாக பிடித்த சந்தேக நபர்: ஜேர்மனியில் இரவில் நடந்த பரபரப்பு
ஜேர்மனியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பெண் ஊழியரை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட பெண்
வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தலைநகர் பெர்லினில் உள்ள மரியன் ஃபெல்டே பகுதியில் அமைந்துள்ள Rewe என்ற சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் உயிர் பறிக்கும் ஆயுதத்தை காட்டி அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரை பிணைக் கைதியாக பிடித்துக் கொண்டார்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த பொலிஸார் மற்றும் அதிரடி மீட்பு படையினர் சூப்பர் மார்க்கெட்டை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தனர்.

இந்த சம்பவத்தின் போது சூப்பர் மார்க்கெட் இருந்து தப்பியோடி வந்த 22 வயது நபர் ஒருவர் வழங்கிய தகவலில், சந்தேக நபர் மிகப்பெரிய கத்தியை வைத்து இருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக தான் தப்பித்து கொண்டதாகவும், ஆனால் தன்னுடைய சக ஊழியர் அவரிடம் சிக்கிக் கொண்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இது தொடர்பாக வெளியான காட்சிகளில், பொலிஸார் அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதையும், அவசர கால வாகனங்கள் குவிக்கப்பட்டு, அதிகாரி ஒருவர் ஏணியை பயன்படுத்தி அந்த கடைக்குள் எட்டிப் பார்ப்பதும் பதிவாகி இருந்தது.
இரவு முழுவதும் நீடித்த இந்த சூழ்நிலைக்கு பிறகு, பொலிஸார் சந்தேக நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியில் அதிரடியாக கடைக்குள் புகுந்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.

மேலும் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பெண்ணும் எந்தவொரு ஆபத்துமின்றி மீட்கப்பட்டார்.
பொலிஸார் விசாரணை
சந்தேக நபரின் இந்த செயலுக்கான காரணம் குறித்து இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வ விவரங்களும் வெளியாகவில்லை.
அதைப்போல பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்றும் பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |