இங்கிலாந்தில் மிதித்தே கொல்லப்பட்ட இந்திய முதியவர் வழக்கு: மகளுக்கு கிடைத்த ஏமாற்றம்
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி முதியவர் ஒருவர் மிதித்தே கொல்லப்பட்ட வழக்கில் அவரது மகளுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
மிதித்தே கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி முதியவர்
2024ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி, தன் நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்த பீம் சென் கோலி (Bhim Sen Kohli, 80) என்னும் இந்திய வம்சாவளியினரான முதியவரை, ஒரு கூட்டம் சிறுவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளார்கள்.
அந்த சிறுவர்கள் குற்றுயிராக கோலியை விட்டு விட்டு ஓட்டம் பிடிக்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோலி, கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துவிட்டார்.
இந்த வழக்கில் ஒரு 15 வயது சிறுவன் மற்றும் ஒரு 13 வயது சிறுமிக்கு மட்டும் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
அந்த 15 வயது சிறுவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிறுமிக்கு மூன்று ஆண்டுகளுக்கு இளைஞர் மறுவாழ்வு ஆணை (youth rehabilitation order) என்னும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு செய்ய உத்தரவு
இந்நிலையில், இப்படி ஒரு கொடூர செயலை அந்த சிறுவன் செய்ததை அறித்த சொலிசிட்டர் ஜெனரல், அந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதுமானதா என கேள்வி எழுப்பினார்.
ஆகவே, அந்த சிறுவனின் வழக்கை மீளாய்வு செய்து, அந்த சிறுவனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை அதிகரிக்கப்படவேண்டுமா இல்லையா என முடிவு செய்யுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்தார் அவர்.
மகளுக்கு கிடைத்த ஏமாற்றம்
இந்நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றம், அந்தச் சிறுவனுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை சரியானதே என தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையை மீளாய்வு செய்த நீதிபதிகளான Lady Justice Macur, Mrs Justice Cutts மற்றும் Mr Justice Murray ஆகியோர், நேற்று தங்கள் தீர்ப்பை வெளியிட்டார்கள்.
அந்தச் சிறுவனுக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள தண்டனை குறைவானதும் அல்ல, அதிகப்படியானதும் அல்ல, அது முகியத்துவம் வாய்ந்ததும் சரியானதும் ஆகும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவால் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள கோலியின் மகளான சூசன் கோலி, இந்த நெறிமுறைகளை மாற்றவும், இந்த இளைஞர்கள் தாங்கள் செய்யும் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பாக்கவும் நாம் பாராளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
இனி இப்படி இந்த இளைஞர்களிடம் வேறு யாரையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |