புடின் ஒரு போர்க் குற்றவாளி... முதன்முறையாக ஜோ பைடன் வெளிப்படை
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் உருக்கமான உரைக்கு பின்னர் பேசிய ஜனாதிபதி ஜோ பைடன், முதன்முறையாக புடின் ஒரு போர்க் குற்றவாளி என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உக்ரைனுக்கு ஆயுத தொகுப்புக்காக 800 மில்லியன் டொலர் அளிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். புதன்கிழமை மதியத்திற்குமேல் உள்ளூர் நேரப்படி, பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ஜோ பைடன், தற்போதையை சூழ்நிலையை கருத்தில் கொண்டால், நான் நினைக்கிறேன் அவர் ஒரு போர்க் குற்றவாளி தான் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இதற்கு உடனையே பதிலளித்துள்ள ரஷ்யா, ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் மன்னிக்க முடியாத சொற்களை ஜோ பைடன் பயன்படுத்தியுள்ளதாக கண்டித்துள்ளது.
ஒரு நாட்டின் தலைவருக்கான கண்ணியத்தை ஜோ பைடன் இழந்துவிட்டார் எனவும், உலகின் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களை வான்வெளி தாக்குதலால் கொன்றொழித்த ஒரு நாடு அமெரிக்கா என்பது அம்பலமான ஒன்று எனவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்ய தாக்குதல்களுக்கு அஞ்சி மக்கள் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்ட மரியுபோலில் உள்ள தியேட்டர் மீது புதன்கிழமை ரஷ்யா குண்டுவீச்சு நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 1,200 பேர்கள் அச்சம்பவத்தின் போது குறித்த திரையரங்கில் தங்கியிருந்ததாகவும், அவர்களின் நிலை தொடர்பில் தகவல் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளாடிமிர் புடின் ஒரு போர்க் குற்றவாளி என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளது அவரது இதயத்தின் குரல் என தெரிவித்துள்ளார் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜென் சாகி(Jen Psaki). மேலும், இந்த விவகாரம் தொடர்பில் சட்ட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் ஜென் சாகி குறிப்பிட்டுள்ளார்.