கண்கள் மூடி தலை கவிழ்ந்து... காபூலில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்கள் உடலுக்கு பைடன் அஞ்சலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களின் உடலுக்கு ஜனாதிபதி பைடன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் டென்வர் மாகாணத்திலுள்ள டோவர் விமானப்படைத் தளத்துக்குச் சென்ற அவர், தனது மனைவி ஜில் பைடன் உடன் இணைந்து மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
மட்டுமின்றி, 13 வீரர்களின் சவப்பெட்டி அருகாமையில், கண்கள் மூடி தலை கவிழ்ந்து, கைகளை பின்னால் கட்டிக்கொண்டு ஜோ பைடன் பல நிமிடங்கள் செலவிட்டது அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 31ம் திகதியுடன் அமெரிக்க மீட்பு விமானங்கள் காபூல் நகரில் இருந்து முழுமையாக வெளியேற உள்ளன. இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தின் அருகாமையில் ஐ.எஸ் கோராசன் அமைப்பு மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது.
இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட சுமார் 170 பேர்கள் கொல்லப்பட்டதுடன் 200கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பினர். இந்த தற்கொலை தாக்குதலுக்கு காரணமான அமைப்பு தண்டிக்கப்படும் என்று ஜோ பைடன் உறுதி அளித்திருந்ததுடன், திடீர் தாக்குதலையும் முன்னெடுத்தார்.
அமெரிக்க வீரர்களின் மரணத்தை அடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். வீரர்களின் உயிர் தியாகத்துக்கு பயங்கரவாதிகள் பதில் சொல்லியாகவேண்டும் என்று ஜோ பைடன் உறுதிபட தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.