எந்நேரத்திலும் இதற்கு பைடன் தயார்! உக்ரைன் நெருக்கடி தொடர்பில் அமெரிக்கா முக்கிய அறிவிப்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலாரஸுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
எனினும், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதேசமயம், உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா, பிரித்தானியா நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், எல்லையிலிருந்து ரஷ்ய டாங்கிகள் வெளியேறும் வரை, உக்ரைன் மீது படையெடுப்பதில் இருந்து புடினை தூதரக முயற்சிகள் மூலம் தடுக்க முடியுமா என்பதை அமெரிக்கா தொடர்ந்து பார்க்கும்.
உக்ரைன் மீது படையெடுத்தால், ரஷ்யா மீது விதிக்க அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பொருளாதாரத் தடைகள் என்ற பெரிய தொகுப்பை உருவாக்கி வைத்துள்ளன.
தற்போது நடந்து வரும் நிகழ்வுகள் அனைத்தையும் பார்க்கும் போது, நாம் ஒரு படையெடுப்பின் விளிம்பில் இருக்கிறோம் என்பதை குறிக்கிறது.
ரஷ்யாவும் பெலாரஸும் தொடர்ந்து இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதாக அறிவித்ததையடுத்து, படையெடுப்பு குறித்து தாம் அதிக கவலை கொண்டுள்ளதாகவும் பிளிங்கன் கூறினார்.