ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் நேரடியாக எச்சரித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் நேரடியாக எச்சரித்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளை குவித்து வருவதால் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
உக்ரைனை ஆக்கிரமித்தால், ரஷ்யா பெரிய விலை கொடுக்க நேரிடும் என மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
ஆனால், தங்களுக்கு உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணமில்லை என ரஷ்யா மறுத்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண்பது குறித்து வியாழன் அன்று அமெரிக்கா மற்றும் ரஷ்யன் தலைவர்கள் சுமார் 50 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர்.
ரஷ்யா அதிபர் புடினுடனான தொலைபேசி உரையாடல் தொடர்பாக ஜோ பைடன் கூறியதாவது, ரஷ்ய இராணுவம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டால், கடுமையான பொருளாதார தடை விதிப்போம் என புடினிடம் திட்டவட்டமாக கூறிவிட்டேன்.
நேட்டோ நாடுகளுடன் ஐரோப்பாவில் எங்களின் இருப்பை அதிகரிப்போம் மற்றும் பெரிய விலை கொடுக்க நேரிடும் என புடினை எச்சரித்தேன்.
உக்ரைன் விவகாரத்தில் ஒரு தீர்வை எட்ட, அடுத்த மாதம் மூத்த ஊழியர்களுடன் மூன்று முக்கிய மாநாடுகளுக்கு புடின் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும் என நான் எதிர்பார்க்கிறேன்.
இருப்பினும், அவர் பணிந்தால் மட்டுமே உக்ரைன் விவகாரத்தில் ஒரு தீர்வை எட்ட முடியும் என தெளிவுப்படுத்தினேன் என ஜோ பைடன் கூறினார்.