பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களின் மனநிலை இதுதான்... தாலிபான்களால் அலறும் ஜோ பைடன்
ஆப்கானிஸ்தான் விவகாரத்தை ஜோ பைடன் சமாளித்த விதம் ஏமாற்றமளிப்பதாகவும் அவர் பதவி விலக வேண்டும் எனவும் பெரும்பாலான அமெரிக்க வாக்காளர்கள் நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 52% அமெரிக்க வாக்காளர்கள் ஜனாதிபதி ஜோ பைடன், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் கோட்டைவிட்டதாகவும், சமாளிப்பதில் தடுமாறியதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் அவர் ஜனாதிபதி பொறுப்பில் இருந்து விலகுவதே சிறந்தது என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தொடர்பிலும் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றே குறிப்பிட்டுள்ளனர். ஆனால் 39% மக்கள் ஜோ பைடனுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கலாம் எனவும், அவர் பதவி விலகும் அளவுக்கு சிக்கலை ஏற்படுத்தவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களில் 32% பேர்கள் அவர் பதவி விலக வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். ஆப்கன் விவகாரத்தில் ஜோ பைடன் அணுகுமுறை சரியாக இல்லை எனவும் அவர் ஜனாதிபதி பதவியில் நீடிக்க தகுதியானவர் அல்ல எனவும் 75% குடியரசுக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவுடன் இணைந்து போரிட்ட ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்களையும் சில அமெரிக்க குடிமக்களையும் தாலிபான்களின் கைகளில் ஒப்படைத்துவிட்டு வெளியேறும் முடிவுக்கு வந்த ஜோ பைடன் கண்டிப்பாக தகுதி இழப்பு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியர் என 60% மக்கள் வாக்களித்துள்ளனர்.
காபூல் விமானநிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பின்னரும், துருப்புகளை திரும்பப் பெறுவதில் ஜனாதிபதி பைடன் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியதாகவே குற்றம் சாட்டப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தொடர்பில் ஜோ பைடன் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டாலும், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், கமலா ஹாரிஸ் நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்க தகுதியற்றவர் என்று 55% வாக்காளர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.