குடியேற்ற முறையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர ஜோ பைடன் கையெழுத்து! பிறப்பிக்கட்ட உத்தரவுகள்
அமெரிக்க குடியேற்ற முறைகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், மனிதநேயத்துடன், சிறந்த நடைமுறைகளை உருவாக்க ஆலோசனை வழங்கவும், அமெரிக்க அதிபர், ஜோ பைடன் மூன்று உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற, ஜோ பைடன், குடியேற்றம் தொடர்பான பல உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
முந்தைய அதிபர், டொனால்டு டிரம்ப் பிறப்பித்த பல கடுமையான விதிகளை, சட்டங்களை ரத்து செய்யும் வகையில், இந்த உத்தரவுகள் பிறப்பிக்க பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், அவர், மூன்று புதிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். ஏற்கனவே உள்ள குடியேற்ற நடைமுறைகளை ஆய்வு செய்யவும், சிறப்பான குடியேற்ற கொள்கையை உருவாக்க ஆலோசனைகளை வழங்கவும் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அடுத்த, 180 நாட்களுக்குள் நிபுணர் குழுவிடம் இருந்து பெறும் ஆலோசனைகளின் அடிப்படையில், குடியேற்ற கொள்கைகளில் மாற்றம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பல லட்சம் இந்தியர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பலன் கிடைக்கும்.
முதல் உத்தரவின்படி, ஏற்கனவே உள்ள விதிகளின்படி பிரிக்கப்பட்ட பெற்றோர் மற்றும் குழந்தைகளை இணைப்பது தொடர்பாக ஆலோசனை வழங்க உள்துறை அமைச்சர் தலைமையில், பணிக் குழு அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக, அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில், உரிய ஆவணங்கள் இல்லாததால், 5,500 குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது .
இரண்டாவது உத்தரவின்படி, புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு திட்டம் குறித்து ஆராய, உள்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது. எல்லையைத் தாண்டி அகதிகள் வருவதற்கான காரணங்களை ஆராய்ந்து, மனிதநேய அடிப்படையிலான அகதிகள் பராமரிப்பு திட்டத்தை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.
மூன்றாவது உத்தரவின்படி, மிகவும் வெளிப்படையான, ஒழுங்குமுறையுள்ள குடியேற்ற திட்டங்களை உருவாக்குவதற்கு, தற்போதுள்ள சட்டங்கள், விதிமுறைகள், நடைமுறைகளில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆராயப்பட உள்ளது.
இது குறித்து, ஜோ பைடன் கூறியுள்ளதாவது, நான் புதிய சட்டங்கள் எதையும் கொண்டு வர வில்லை. ஏற்கனவே இருந்த மோசமான கொள்கைகளை நீக்கி உள்ளேன். மிகவும் வெளிப்படையான, மனிதநேயத்துடன் கூடிய, குடியேற்ற நடவடிக்கைகள் மூலமாகவே, அமெரிக்காவை வலுவானதாக, பாதுகாப்பானதாக மாற்ற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.