ரஷ்யாவுக்கு எதிரான கூட்டு பதிலடி.. அழைப்பு விடுக்கும் அமெரிக்கா!
ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க குவாட் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிற நாடுகளுக்கு அழைப்பு விடுப்பார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்கேற்கும் நாற்கர பாதுகாப்பு உரையாடல் எனப்படும் குவாட் மாநாடு, வருகிற மே 24ஆம் திகதி டோக்கியோவில் நடைபெறும் என ஜப்பான் அறிவித்தது.
இந்த மாநாட்டில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஜோ பைடன் ரஷ்யாவுக்கு எதிராக ஒருங்கிணைந்த பதிலடியை கொடுக்கும் வகையில் பிரச்சனையை எழுப்புவாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, 'இந்த சந்திப்பில் நாங்கள் அதே உணர்வுகளை வெளிப்படுத்துவோம்' என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், இந்த சந்திப்பு நடைபெற இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. நிச்சயமாக நிறைய விடயங்கள் நடக்கலாம். நாங்கள் என்ன செய்கிறோம் மற்றும் அந்த நேரத்தில் விடயங்கள் எங்கு நிற்கின்றன என்பதைப் பற்றிய அறிவிப்பை ஜனாதிபதி நிச்சயமாக வழங்குவார் எனவும், இந்தப் பயணத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களை விரைவில் பகிர்வோம் எனவும் தெரிவித்தார்.