உலகத் தலைவர்களில் முதலாவதாக... அமெரிக்க ஜனாதிபதி பைடனை சந்திக்கவிருக்கும் பிரதமர் ட்ரூடோ
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் உலகத் தலைவர்களில் முதலாவதாக தொலைபேசியில் உரையாடியுள்ள கனடா பிரதமர் ட்ரூடோ, தற்போது நேரிடையாக அவரை சந்திக்கவிருக்கிறார்.
குறித்த தகவலை பிரதமர் ட்ரூடோவின் அலுவலகமே அறிவித்துள்ளது. இரு தலைவர்களும் அடுத்த மாதத்தில் நேரிடையாக சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
வட அமெரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இரு நாட்டு தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளனர்.
இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே நடைபெறவிருக்கும் இந்த சந்திப்பானது, இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் மேம்படுத்தும் வகையில் அமையும் என்றே கூறப்படுகிறது.
இதே கருத்தை வெள்ளைமாளிகை நிர்வாகமும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
கனடா- அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தவும், கொரோனா பரவல், மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஏற்படவும், இந்த சந்திப்பு வழிவகுக்கும் என வெள்ளைமாளிகை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இன்னொருமுறை இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக உரையாட ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் சந்திப்புக்கான திகதி உள்ளிட்ட எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.
ஜனாதிபதி டிரம்பின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளுடன் ஒத்துப்போகாத பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.
ஆனால், ஜோ பைடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் முதலாவதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இருவரும் முக்கிய விடயங்கள் தொடர்பிலேயே விவாதித்ததாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசி தொடர்பிலும், மருத்துவ நிபுணர்களை இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்வது தொடர்பிலும், அதிமுக்கியமான மருந்துகளின் தடை நீக்கம் உள்ளிட்டவை அதில் முக்கியமானதாக கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்றுள்ளது ஒரு புதிய துவக்கம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டியிருந்தாலும்,
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு கீஸ்டோன் XL எண்ணெய் குழாய்த்திட்டத்தை ஜனாதிபதி பைடன் ரத்து செய்த பின்னர் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் லேசான கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றே கூறப்படுகிறது.