எங்களுக்கு மறுக்கப்பட்டது... எவராலும்: மத்திய கிழக்கு, அமெரிக்காவிற்கு ஈரானின் கடும் எச்சரிக்கை
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் சூழலை, போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப ஈரான் அனுமதிக்காது என்று அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார்.
காலிபாஃப் எச்சரிக்கை
ஹார்முஸ் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் இல்லாததில்தான் அந்த நீரிணையின் பாதுகாப்பு அடங்கியுள்ளது என்றும் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் தனது கச்சா எண்ணெயை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாவிட்டால், எந்தவொரு வளைகுடா நாடும் தனது எண்ணெயை விற்பனை செய்ய ஈரான் அனுமதிக்காது என்றும் காலிபாஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த மோதல் தற்போது முழு வெற்றி அல்லது முழு தோல்வி என்ற நிலையை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலின் போதெல்லாம், அமெரிக்கப் படைகள் அந்த நாட்டின் ஒரு பாலம் அல்லது மின் நிலையத்தை அழித்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே காலிபாஃப் பதிலளித்துள்ளார்.
இரு தரப்பினரும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளைத் தொடர்ந்து குறிவைத்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராகத் தொடர்ந்து 12-வது இரவாகத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்டவும், சர்வதேச கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்கவும் அமெரிக்கா முயன்று வரும் நிலையில்,
இப்பிராந்தியக் கடல் பகுதிகளில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களான மாலுமிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

கண்ணுக்குக் கண்
தூதுக்குழு முன்னெடுக்கும் முயற்சிகளில் பகிரங்கமாக முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையிலும், உலகளாவிய எரிசக்திக்கு மிக முக்கியமானதும் பெருமளவில் மூடப்பட்டிருப்பதுமான ஹார்முஸ் நீரிணை குறித்த சர்ச்சையில் இரு தரப்பும் தங்கள் பிடிவாதத்தில் உறுதியாக இருக்கும் நிலையிலும், அமெரிக்காவின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்ரேலால் தூண்டப்பட்டு, பொதுவாக அமெரிக்க மக்களாலும் நிராகரிக்கப்பட்ட இந்தப்போர், உலகளாவிய பொருளாதாரத்தில் மேலும் சீர்குலைவை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளதுடன், இந்த இலையுதிர் காலத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக எரிபொருள் விலையையும் உயர்த்தியுள்ளது.

இதனிடையே, ஈரான் கண்ணுக்குக் கண் என்ற தற்காப்புக் கோட்பாடுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வறட்சியால் வாடும் அண்டை வளைகுடா நாடுகளுக்குக் குடிநீர் வழங்கும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் ஈரான் குறிவைத்துள்ளது.
ஒரு நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்பு இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால் ஒழிய, இத்தகைய தாக்குதல்களை சர்வதேசச் சட்டம் பொதுவாகத் தடை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |