ஜேர்மனி தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சிக்கு மாபெரும் வெற்றி: சிக்கலில் ஆளும் கட்சி
ஜேர்மனியில் நடந்து முடிந்த இரண்டு மாகாண தேர்தல்களிலும், புலம்பெயர்தல் எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட கட்சியான வலதுசாரிக் கட்சி ஒன்றிற்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.
புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சிக்கு மாபெரும் வெற்றி
கிழக்கு ஜேர்மனியின் Saxony மற்றும் Thuringia மாகாணங்களில் நடந்து முடிந்த தேர்தல்களில், வலதுசாரிக் கட்சியும் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியுமான Alternative for Germany (AfD) கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
அதற்கு அடுத்த இடத்தையும், புதிதாக துவங்கப்பட்ட Sahra Wagenknecht Alliance (BSW) கட்சிதான் பிடித்துள்ளது.
ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகள் மோசமான தேர்தல் முடிவுகளைச் சந்தித்துள்ளன.
சொல்லப்போனால், ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகளைவிட, AfD கட்சிக்கு இரண்டு மடங்குக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன.
ஆளும் கட்சி வயிற்றில் புளியைக் கரைத்துள்ள முடிவுகள்
இந்த தேர்தல் முடிவுகள், ஆளும் கூட்டணிக் கட்சிக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளன.
ஏனென்றால், சமீபத்தில் புலம்பெயர்ந்தோர் ஒருவர் நடத்திய தாக்குதலுக்கு, உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்தது அரசு. அத்துடன், ஆப்கன் நாட்டு புலம்பெயர்ந்தோர் 28 பேர் நாடுகடத்தப்பட்டார்கள்.
ஆக, நாங்கள் புலம்பெயர்தலைத் திறம்பட கட்டுப்படுத்துகிறோம் என்பதுபோல அரசு நடவடிக்கை எடுத்தாலும், அது வாக்காளர்கள் மீது எவ்விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
எனவே, ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், AfD கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றியும், மக்களிடையே பெருகி வரும் ஆதரவும், ஆளும் கூட்டணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னொரு பக்கமோ, கிழக்கு ஜேர்மனியில் AfD கட்சி ஆட்சிக்கு வந்தால் தங்கள் நிலை என்ன என்பது குறித்து, புலம்பெயர்ந்தோரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |