ட்ரம்பிற்கு நெருக்கடி தரும் தகவல்... மிக சக்திவாய்ந்த ஆயுதத்தை அறிமுகப்படுத்தும் சீனா
அமெரிக்கா வரையில் சென்று தாக்கும் வலிமை கொண்ட மிக சக்திவாய்ந்த ஆயுதம் ஒன்றை சீனா அறிமுகம் செய்யவிருக்கிறது.
சில நாடுகளுக்கு பதட்டம்
சீனா தலைநகரான பெய்ஜிங்கில் செப்டம்பர் 3 ஆம் திகதி இராணுவ அணிவகுப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது. அதில் கப்பல் தடுப்பு ஏவுகணைகள், போரில் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் மற்றும் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகியவற்றில் சீனா தனது சமீபத்திய முன்னேற்றங்களை இராணுவ அணிவகுப்பில் காட்சிப்படுத்த உள்ளது.
தனது வலிமையை விளம்பரப்படுத்தி, சாத்தியமான வாங்குபவர்களை ஈர்க்கவே இந்த முடிவு. அணிவகுப்புக்கு முன்பே, பெய்ஜிங்கின் தெருக்களில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
சீனா பல்வேறு ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை காட்சிப்படுத்தி வருகிறது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்படுவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில், இந்த ஆண்டு அணிவகுப்பு மேம்பட்ட போர் அமைப்புகளின் கண்காட்சியாகவும் இருக்கும் என்றே கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அணிவகுப்பு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வாக நடைபெறும், அவர் தியனன்மென் சதுக்கத்தில் நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்.
உலகின் நான்காவது பெரிய
இந்த அணிவகுப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இந்தியா பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் அரசாங்கத்துடன் உரசலில் ஈடுபட்டுவரும் நாடுகளின் தலைவர்கள் பலர் இந்த விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். சீனா தனது ராணுவத்தை நவீனமயமாக்குவதில் அதிக பணத்தை முதலீடு செய்து வருகிறது.
தற்போது உலகின் நான்காவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக உள்ள சீனா, அதன் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தான் போன்ற வளரும் நாடுகள் மட்டுமே.
இந்த நிலையில், அணிவகுப்பில் சீனாவின் DF-41 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையே முதன்மை அம்சமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இது 15,000 கிலோமீற்றர் வரை தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது, அதாவது அமெரிக்காவில் உள்ள இலக்குகளை இது தாக்கும் திறன் கொண்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |