Omicron சுயலாபத்துக்காக பில்கேட்ஸால் உருவாக்கப்பட்டதா? இணையத்தில் வைரலாகியுள்ள செய்தியின் உண்மை நிலை
சமூக ஊடக பயனர்கள் சிலர், Omicron என்பது 1999ஆம் ஆண்டு, பில் கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ கேமின் பெயர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அத்துடன், கொரோனா என்பது, சுய லாபத்துக்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட ஒரு வைரஸ் என்று தொடர்ந்து நெட்டிசன்கள் சிலர் கூறிவருகிறார்கள்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்காகவும், தடுப்பூசியை உருவாக்கி விற்று அதனால் பெரும் லாபம் அடைவதற்காகவும் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என்கிறார்கள் அவர்கள்.
அத்துடன், சமீபத்தில், சில சமூக ஊடக பயனர்கள், 1999ஆம் ஆண்டு பில் கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ கேமின் பெயர்தான் Omicron என்று கூறியுள்ளார்கள்.
அந்த விளையாட்டிலும் மனிதர்களைப்போல நடிக்கும் பேய்கள் மனிதர்களின் ஆன்மாக்களை கொள்ளையிடுவதாகவும், அது தற்செயலான ஒன்றாக இருக்கமுடியுமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
ஆனால், போலிச் செய்திகளின் உண்மை கண்டறியும் இந்தியா டுடே பத்திரிகையின் பிரிவு (India Today Anti Fake News War Room - AFWA), இது உண்மையில்லை என கண்டறிந்துள்ளது.
உண்மையில் இந்த விளையாட்டை உருவாக்கியது பில் கேட்ஸோ மைக்ரோசாஃப்ட் நிறுவனமோ அல்ல, அதை உருவாக்கியது பிரான்ஸ் நிறுவனம் ஒன்று என்கிறது அந்த அமைப்பு.
மேலும், அந்த விளையாட்டின் பெயர் Omikron: The Nomad Soul என்பதாகும். அதாவது Omikron என்ற வார்த்தையில் C என்ற ஆங்கில எழுத்துக்கு பதிலாக K என்ற எழுத்து உள்ளது.
அந்த விளையாட்டை உருவாக்கியது, Quantic Dream என்ற பிரெஞ்சு நாட்டு வீடியோ கேம் உருவாக்கும் அமைப்பு, அதன் நிறுவனர் David Cage என்பவர், அதை வெளியிட்டது Eidos Interactive என்ற நிறுவனம்.
மாறாக பில் கேட்ஸோ மைக்ரோசாஃப்ட் நிறுவனமோ அதை வெளியிடவில்லை.
உலக சுகாதார அமைப்பு, 2021ஆம் ஆண்டுதான், இந்த மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்களுக்கு கிரேக்க எழுத்துக்களை பயன்படுத்தி பெயரிட முடிவு செய்தது. அப்படி பெயரிட்டுக்கொண்டே வந்த நிலையில், 15ஆவது கிரேக்க எழுத்தான Omicron என்ற எழுத்தின் பெயர் சமீபத்தில் மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸுக்கு இடப்பட்டது.
ஆக, இந்த வைரல் செய்தியில் உண்மையில்லை. Omicronக்கு பில் கேட்ஸுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதற்கு அடிப்படையே இல்லை என்பதுதான் உண்மை!