AI ஆதிக்கத்திலும் இந்த 3 தொழிலில் மனிதர்களின் உதவி தேவை - பில்கேட்ஸ் கணிப்பு
நாளுக்குநாள் AI தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
இதனால், பல துறைகளில் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
AI வளர்ச்சியால் வேலையிழப்பு
சமீபத்தில், Google மற்றும் Open AI போன்ற நிறுவனங்களின் AI மாடல் மூலம், படைப்புத்துறைக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து, ஹாலிவுட் பிரபலங்கள் அமெரிக்க அரசுக்கு கடிதம் எழுதினர்.
இந்நிலையில் AI தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
இதில் பேசிய அவர், "பல வருடங்கள் கழித்து, AI நிச்சயமாக ஆட்சி செய்யும். பெரும்பாலான விஷயங்களுக்கு, மனிதர்கள் இனி தேவைப்பட மாட்டார்கள். இருப்பினும், சில வேலைகள் AI ஆல் மாற்றப்பட வாய்ப்பில்லை.
உதாரணத்திற்கு விளையாட்டுத்துறையை எடுத்துக்கொண்டால், மக்கள் ரோபோக்கள் பேஸ்பால் விளையாடுவதைப் பார்க்க விரும்ப மாட்டார்கள்.
அதே போல் மூன்று துறைகளில் மனிதர்களின் ஆதிக்கத்தை AI-ஆல் தற்போதைக்கு மாற்ற முடியாது.
கோடிங் எழுதுபவர்கள்
முரண்பாடாக AI அமைப்புகளை உருவாக்குபவர்கள்தான் தங்கள் வேலையைத் தக்க வைத்துக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.
கோடிங் எழுதுவதில், AI குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருந்தாலும், சிக்கலான மென்பொருளை உருவாக்கத் தேவையான துல்லியம் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்கள் இன்னும் அதற்கு இல்லை.
AI ஐ பிழைத்திருத்தம் செய்து அதை மேம்படுத்தி, நிர்வகிப்பதற்கு மனித நிரலாளர்கள் அவசியமாக இருப்பார்கள்.
எரிசக்தி ஆற்றல் நிபுணர்கள்
எரிசக்தித் துறை AI-ஆல் தனியாக நிர்வகிக்க முடியாத அளவுக்கு மிகவும் பரந்ததாகவும், சிக்கலானதாகவும் உள்ளது.
AI இந்த துறையின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்த முடியும் என்றாலும், பகுப்பாய்விலும், முடிவெடுப்பதிலும், நெருக்கடி மேலாண்மையிலும் மனித நிபுணத்துவம் இன்றியமையாதது.
உயிரியலாளர்கள்
பரந்த தரவுத்தொகுப்புகளைச் செயலாக்குவதிலும், நோய் கண்டறிதலுக்கும் AI உதவினாலும், அது விமர்சன சிந்தனையில் தேர்ச்சி பெறவில்லை.
மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளில், படைப்பாற்றல், உள்ளுணர்வு மற்றும் விமர்சன சிந்தனையை உயிரியலாளர்கள் நம்பியுள்ளனர்.
AI இந்த துறையில், ஒரு சக்திவாய்ந்த கருவியாகச் செயல்பட்டாலும், ஒருபோதும், மனிதர்களுக்கு மாற்றாக செயல்படாது." என தெரிவித்துள்ளார்.
தொழில்துறை புரட்சி மற்றும் இணையம் பணியாளர்களை மாற்றியமைத்தது போல, நாம் எவ்வாறு வேலை செய்கிறோம், எந்தத் திறன்கள் மதிப்புமிக்கதாக இருக்கின்றன என்பதை AI மறுவரையறை செய்யும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |