இந்த ஆண்டில் திருமணம் செய்தால் ரூ.12 லட்சம் பரிசு - தொழிலதிபர் அறிவிப்பு
இந்த ஆண்டில் திருமணம் செய்யும் ஊழியர்களுக்கு ரூ.12 லட்சம் வழங்குவதாக தொழிலதிபர் ஒருவர் அறிவித்துள்ளார்.
துபாய் தொழிலதிபர்
உலகளவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர், அதிகரித்து வரும் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக திருமணம் செய்வது மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.
பல்வேறு நாடுகளும் திருமணம் செய்வது மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், மானியம் வழங்கி வருகிறது.

அதேபோல், துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு மானியம் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில், அல் ஹப்தூர் குழுமம் 1970 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த குழுமம் ஹொட்டல்கள், கார்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள் ஆகிய தொழில்களை நடத்தி வருகிறது.
இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
குழந்தை பெற்றால் ரூ.25 லட்சம்
இந்த அல் ஹப்தூர் குழும தலைவர் கலஃப் அஹ்மத் அல் ஹப்தூர், சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "இந்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு 50,000 DHR (இந்திய மதிப்பில் ரூ.12.5 லட்சம்) மற்றும் குழந்தை பெற்றுக்கொண்டால் இரு மடங்காக ரூ.25 லட்சம் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

மேலும், "திருமணம் மற்றும் குடும்பத்தை வளர்ப்பது வெறும் தனிப்பட்ட விஷயங்கள் அல்ல, மாறாக சமூக மற்றும் தேசிய பொறுப்புகள் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன், ஏனெனில் நாடுகள் கட்டமைக்கப்பட்டு அவற்றின் மூலம் சமூகங்கள் நிலைநிறுத்தப்படுகின்றன.
திருமணம் மற்றும் குடும்பம் மூலம் சமூகங்களை உருவாக்குவதை ஊக்குவிப்பது ஒரு வலுவான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு மிக முக்கியமானது என்றும், ஏனெனில் குழந்தைகள் நாட்டின் எதிர்காலத்தில் ஒரு முதலீடாகும்.
குடும்பங்களைக் கட்டியெழுப்புவது ஒரு பகிரப்பட்ட பொறுப்பாகும், மேலும் ஒவ்வொரு முயற்சியும், சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, நமது சமூகம் மற்றும் தேசத்தின் எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |