ஷாருக்கானின் 60வது பிறந்தநாள்: அர்னால்ட்டை விட அதிக சொத்து..முதல் பில்லியனர் நடிகரானது எப்படி?
பாலிவுட் திரையுலகின் பாட்ஷா, கிங் என்றெல்லாம் அழைக்கப்படும் நடிகர் ஷாருக் கானின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை இங்கே காண்போம்.
ஷாருக் கான்
இன்று தனது 60வது வயதில் அடியெடுத்து வைக்கும் நடிகர் ஷாருக் கான், இந்திய திரையுலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
உலகளவில் பொழுதுபோக்கு ஊடகத்தில் புகழ்பெற்றவர்களில் ஒருவராக ஷாருக் கான் திகழ்கிறார். இந்தியில் பல பிளாக் பாஸ்டர் படங்களைக் கொடுத்த ஷாருக் கான், இந்தியாவின் முதல் பில்லியனர் நடிகராக சமீபத்தில் மாறினார்.
ஹுருன் இந்தியா வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் 2025யின்படி, நடிகர் ஷாருக் கானின் நிகர மதிப்பு 1.4 பில்லியன் டொலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ரூ.12,490 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 
இது பாப் நட்சத்திரம் டெய்லர் ஸ்விஃப்ட் (1.3 பில்லியன்), நகைச்சுவை நடிகர் ஜெர்ரி சீன்ஃபீல்ட் (1.2 பில்லியன்), ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (1.2 பில்லியன்) ஆகியோரை விட அதிகம் என்று கூறப்படுகிறது.
எப்படி பில்லியனர் ஆனார்?
ஷாருக் கான் நடிப்பைத் தாண்டி வணிகம், விளையாட்டு, விளம்பரம் என பல துறைகளில் இருந்தும் வருமானம் ஈட்டுகிறார். 
ஒரு நடிகராக அவர் சம்பாதித்ததைத் தவிர, முதலீடுகளில் இருந்து முதன்மையான செல்வதை ஷாருக் கான் சேர்த்துள்ளார்.
தனது Red Chillies தயாரிப்பு நிறுவனம், VFX studio ஆகியவற்றின் மூலம் வருமானம் பார்க்கும் இவர், ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்சிலும் முதலீடு செய்துள்ளார். இது மட்டுமின்றி உலகளாவிய முதலீடுகளை செய்துள்ளார்.
இந்தியா மற்றும் மத்திய கிழக்கில் ரியல் எஸ்டேட் முதலீடுகளுடன், உலகளாவிய உட்புற தீம் பார்க் KidZaniaவின் இந்திய உரிமையிலும் ஷாருக் பங்குகளை வைத்துள்ளார். 

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |