ராஜஸ்தானில் முதன்முறையாக திருநங்கைக்கு பிறப்புச் சான்றிதழ்!
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் முதன்முறையாக திருநங்கைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
திருநங்கைக்கு பிறப்பு சான்றிதழ்
ராஜஸ்தானில் முதன்முறையாக ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் திருநங்கை ஒருவருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் முதல் திருநங்கையின் பிறப்புச் சான்றிதழை ஜெய்ப்பூரைச் சேர்ந்த நூர் ஷெகாவத்துக்கு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான (பிறப்பு மற்றும் இறப்பு) பன்வர்லால் பைர்வா வழங்கினார்.
பின்னர் பேசிய பன்வர்லால் பைர்வா, "ஆண் மற்றும் பெண் பிறப்பு பதிவுகளுடன், திருநங்கைகளின் பிறப்பு பதிவுகளும் இனி மாநகராட்சி போர்ட்டலில் கிடைக்கும்" என்று கூறினார்.
மேலும் அவர்,"திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுத் திட்டமும் தொடங்கப்படும்" என்றார்.
திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு
திருநங்கையான நூர் ஷெகாவத்தின் பாலினம் பிறக்கும் போது 'ஆண்' என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இவர், ஆங்கில வழிப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, திருநங்கைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள், ஆண்கள் மற்றும் பெண்களின் பதிவேடுகளுடன் திருநங்கைகளின் பதிவுகளை அரசு பராமரிக்க இந்த முயற்சி உதவும் என நூர் ஷெகாவத் கூறினார்.
திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க அதிகாரிகளை வலியுறுத்த நூர் ஷெகாவத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |