ஆடையின்றி சூரியக் குளியல் எடுக்கலாம் ஆனால் நடனமாட தடை: ஜேர்மனியின் வித்தியாசமான விதிகள்
ஜேர்மனியில் 16 வயதுடையவர்கள் சட்டப்படி ஒயின், பியர் குடிக்கலாம், சில பொது இடங்களில் ஆடையின்றி சூரியக் குளியல் எடுக்கலாம், சில மதுபான விடுதிகளில் புகை பிடிக்கலாம்.
ஆனால், நடனமாடவும், மணலில் வீடு கட்டவும் சில நாட்களில் அனுமதி இல்லை. அப்படிப்பட்ட சில வித்தியாசமான விதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
ஜேர்மனியின் வித்தியாசமான விதிகள்
1. புனித வெள்ளியன்று நடனமாட தடை
ஆம், ஜேர்மனியின் பெரும்பாலான மாகாணங்களில் புனித வெள்ளி என்பது அமைதியான பொது விடுமுறையாகும்.
அன்று பல இடங்களில் நடனமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பெர்லினில் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பவேரியா மாகாணத்தில் புனித வெள்ளிக்கு முந்தைய தினமான வியாழன் முதல் சனிக்கிழமை வரை நடனமாடத் தடை.
விதிகளை மீறுவோருக்கு 10,000 யூரோக்கள் வரை தடை விதிக்கப்படலாம்.
2. இரவில் காளான் சேகரிக்க தடை
ஜேர்மனியில், இரவு நேரங்களில் காடுகளில் காளான் பறிப்பது சட்டப்படி குற்றமாகும்.
முக்கியமாக, வன விலங்குகளை மக்கள் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக இந்தத் தடை.
3. மணல் வீடு கட்டத் தடை
ஜேர்மனியின் பால்டிக் கடற்கரை வட கடற்கரையில் பிள்ளைகள் மணல் வீடு கட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மணல் அரிப்பைத் தவிர்ப்பதற்காக இந்தத் தடை. சில இடங்களில் தடையை மீறினால் 1,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
4. புல் வெட்டத் தடை
ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுத் தோட்டத்தில் புல் வெட்ட அனுமதி இல்லை.
மக்கள் ஞாயிற்றுக்கிழமை அமைதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்போது, அவர்களுடைய அமைதியைக் குலைக்கக்கூடாது என்பதற்காக இந்த விதி.
5. நெடுஞ்சாலையில் எரிபொருள் இல்லாமல் வாகனம் நிற்கக்கூடாது
ஆம், ஜேர்மனியில், எரிபொருள் காலியாகி வாகனம் நெடுஞ்சாலையில் நிற்பது சட்டப்படி குற்றமாகும்.
வேகமாக வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும் நெடுஞ்சாலையின் நடுவில் வாகனங்கள் திடீரென நிற்பதால் விபத்து ஏற்படலாம் என்பதால் இந்த விதி.
அதாவது, காரை எடுப்பதற்கு முன், அதில் போதுமான எரிபொருள் உள்ளதா என்பதை சோதித்து உறுதி செய்துவிட்டுத்தான் பயணம் புறப்படவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |