சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்று தங்கள் நாட்டை தவறாக சித்தரிப்பதாக பிரான்ஸ் அமைச்சர் குற்றச்சாட்டு
சமீபத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் திரைப்படம் ஒன்றின்மீது பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிளாக் பாந்தர் 2
பிளாக் பாந்தர் 2 என்னும் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகமெங்கும் வெற்றிநடைபோட்டுவருகிறது.
ஆனால், அந்தத் திரைப்படம் தங்கள் நாட்டு வீரர்களை தவறாக சித்தரிப்பதாக பிரான்ஸ் இராணுவ அமைச்சரான Sébastien Lecornu விமர்சித்துள்ளார்.
அந்தத் திரைப்படத்தில், பிரான்ஸ் நாட்டு இராணுவ வீரர்கள் சிலரை ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டம் நடக்கும் கட்டிடத்துக்குள் இழுத்துவருவது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வக்காண்டா நாட்டுக்குச் சொந்தமான வைப்ரேனியம் என்னும் உலோகத்தைத் திருடமுயன்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்படுவதாக அந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
தவறாக சித்தரிப்பதாக பிரான்ஸ் அமைச்சர் குற்றச்சாட்டு
அந்தக் காட்சியில் பிரான்ஸ் நாட்டு வீரர்களாக காட்டப்படுபவர்கள், மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலிக்காக போராடி உயிர் நீத்த பிரான்ஸ் நாட்டு வீரர்களைப்போல உள்ளதாகவும், அது தவறான சித்தரிப்பு என்றும் கூறியுள்ளார் Sébastien Lecornu.
அத்துடன், அந்தக் காட்சியை முதலில் சமூக ஊடகத்தில் வெளியிட்டவரான Jean Bexon என்னும் ஊடகவியலாளரும், அந்த நடிகர்கள் அணிந்திருக்கும் சீருடை, மாலியில் இஸ்லாமியவாதிகளுக்கெதிரான பிரான்ஸ் இராணுவத்தின் Operation Barkhane என்னும் நடவடிக்கையின்போது பிரான்ஸ் நாட்டு இராணுவ வீரர்கள் அணிந்திருந்த சீருடையைப்போலவே இருப்பதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.