உடல் வலுப்பெற கருப்பு உளுந்து பாயசம்: எப்படி செய்வது?
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
அந்தவகையில், கருப்பு உளுந்தை பயன்படுத்தி சுவையான பாயசம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- ½ கப்
- பாசி பருப்பு- ¼ கப்
- தண்ணீர்- 5 கப்
- கருப்பட்டி- 1 கப்
- சுக்கு தூள்- ¼ ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- துருவிய தேங்காய்- ½ கப்
- தேங்காய் பால்- 1 கப்
- முந்திரி- 15
- நெய்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் கருப்பு உளுந்தை நன்கு கழுவி இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை நன்கு வடிகட்டி அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் முளை கட்டி வைக்கவேண்டும்.
பின் பாசிப்பருப்பை வறுத்து கழுவி குக்கரில் சேர்த்து அதனுடன் முளை கட்டிய உளுந்து மற்றும் தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு இறக்கவும்.
பின்னர் நன்கு வெந்தவுடன் அதனை மசித்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.
கருப்பட்டி நன்கு கரைந்தவுடன் இதனுடன் சுக்கு தூள், ஏலக்காய் தூள், துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும்.
கொதித்தவுடன் அடுப்பை அனைத்து இதில் தேங்காய் பால் சேர்த்து கிளறி இதில் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கினால் பாயசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |