ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை இடையிலான 2+2 ஆலோசனை கூட்டம் வாஷிங்டனில் நடந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென், உக்ரைனின் புச்சா நகர் படுகொலை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த இந்திய நாடாளுமன்றம் மற்றும் ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதியாக இருந்ததை தான் கவனித்ததாக தெரிவித்தார்.
மேலும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அமெரிக்காவின் நட்பு நாடுகள் குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது, இந்தியா ஒரு மாதத்திற்கு இறக்குமதி செய்யும் எண்ணெய் அளவை ஐரோப்பா ஒரே நாளில் வாங்குவதாகவும், முதலில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை ஐரோப்பா நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.