கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு
வெனிசுலா எண்ணெய் கப்பல்களை முற்றுகையிடுவதன் மூலம் அமெரிக்கா கரீபியன் கடலில் கடற்கொள்ளை மற்றும் வழிப்பறிபை மீண்டும் உயிர்ப்பித்து வருகிறது என ரஷ்யா கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
முழுமையான சட்டமின்மை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடைமுறைவாதம் ஒரு பேரழிவைத் தவிர்க்க உதவும் என்று அது நம்புவதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. வெனிசுலா எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சக செய்தித்தொடர்பாளர் Maria Zakharova தெரிவிக்கையில்,

சமீப நாட்களில் நாம் கரீபியன் கடலில் முழுமையான சட்டமின்மையை காண்கிறோம்; அங்கு நீண்ட காலமாக மறக்கப்பட்ட பிறர் சொத்துக்களைத் திருடும் செயல்களான கடற்கொள்ளை மற்றும் வழிப்பறி போன்ற குற்றங்கள் மீண்டும் தலைதூக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, வெனிசுலா தொடர்பில் பதற்றத்தைக் குறைக்க ரஷ்யா தொடர்ந்து வாதிட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நடைமுறைவாதமும் பகுத்தறிவும், சர்வதேச சட்ட நெறிமுறைகளின் கட்டமைப்பிற்குள், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளைக் கண்டறிய வழிவகுக்கும் என்று ரஷ்யா நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, இறையாண்மை மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதையும், வென்சுலா நாட்டின் நிலையான மற்றும் பாதுகாப்பான வளர்ச்சியைப் பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ரஷ்யாவின் ஆதரவை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் என்றும் Maria Zakharova தெரிவித்துள்ளார்.

ஒரு டசினுக்கும் மேற்பட்ட
முன்னதாக வெனிசுலாவில் இருந்து புறப்படும் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா முற்றுகையிட்டுக் கைப்பற்றிவரும் நிலையில், அமெரிக்காவிடம் சிக்காமல் இருக்க கெல்லி என்ற மிகப்பெரிய எண்ணெய் கப்பல் மீண்டும் வெனிசுலா துறைமுகத்திற்கு திரும்பியது.
கடந்த சனிக்கிழமை சுமார் 1.9 மில்லியன் பீப்பாய்கள் வெனிசுலாவின் மெரே கனரக கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற பனாமா கொடியுடன் கூடிய செஞ்சுரீஸ் கப்பலை அமெரிக்க கடலோர காவல்படை முற்றுகையிட்டு நிறுத்தியது.

அமெரிக்காவின் கடும்போக்கு நடவடிக்கைகளால், ஒரு டசினுக்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் வெனிசுலாவில் தங்கள் உரிமையாளர்களிடமிருந்து புதிய உத்தரவுகளுக்காகக் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடை விதிக்கப்பட்ட கப்பல்கள் அனைத்தும் வெனிசுலாவில் இருந்து வெளியேறினால் அல்லது வெனிசுலாவிற்கு சென்றால், கட்டாயம் முற்றுகையிடப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |