விரல் நகங்களே அடையாளம்... உக்ரைன் பெண் தொடர்பில் உலகை உலுக்கிய புகைப்படம்
உக்ரைன் நகரமான புச்சாவில் ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனத்திற்கு இலக்கான பெண் ஒருவரை அவரது விரல் நகங்களால் அடையாளம் கண்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் புச்சா நகரம் ரஷ்ய துருப்புகளால் கொடூரமாக சிதைக்கப்பட்ட தகவல் உலக நாடுகளை கொந்தளிக்க வைத்துள்ளதுடன், ரஷ்யா மீது போர் குற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்க ஐக்கிய நாடுகள் மன்றத்திலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
புச்சா நகர தெருக்களில் சடலங்களை மட்டுமே தற்போது காண முடிவதாக கூறும் அதிகாரிகள், தீயில் மொத்தமாக கருகிய நிலையில் 50 சடலங்களை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், புச்சா நகரில் பிரபல ஒப்பனைக் கலைஞர் ஒருவரை, அவரது விரல் நகங்களை கொண்டே உறவினர்களும் நண்பர்களும் அடையாளம் கண்டுள்ளனர். சிதைந்து போன அவரது உடலும், விரல் நகங்களுடன் கூடிய அந்த புகைப்படமும், தற்போது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
52 வயதான Iryna Filkina ஒப்பனைக்கலையில் தேர்ச்சி பெற்று, தமது சமூக ஊடக பக்கங்களில் பெண்களுக்கான அழகு குறிப்புகளை தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார். மேலும், சம்பவத்தன்று தமது மிதிவண்டியில் சென்றவர் ரஷ்ய டாங்கியால் தாக்கப்பட்டு உடல் சிதறி பலியானார்.
இதில், இன்னொரு ஒப்பனைக் கலைஞரே Iryna Filkina-ன் கை விரல்களை அடையாளம் கண்டு, கொல்லப்பட்டவர் Iryna Filkina என உறுதி செய்துள்ளார். அவரது சிதந்த உடலைப் பார்த்த போது, உண்மையில் சில நிமிடங்கள் ஸ்தம்பித்து போனேன் என கூறும் அவரது தோழி, அதை வெளியிட வார்த்தைகள் இல்லை என கண்கலங்கியுள்ளார்.
மிதிவண்டியில் செல்பவர் ஒருவர் மீது ரஷ்ய டாங்கிகள் தாக்குதல் நடத்துவது உக்ரைன் இராணுவத்தின் ஆளில்லா விமானத்தின் கமெராவில் பதிவாகியுள்ளது. திடீரென்று தாக்கப்படுவதும், பின்னர் அப்பகுதியில் புகைமூட்டம் எழுவதும் கமெராவில் பதிவாகியிருந்தது.
ஆனால் அந்த மிதிவண்டியில் சென்றவர் Iryna Filkina என்பதை பின்னரே அவரது நண்பர்களும் மகளும் உறுதி செய்துள்ளனர். புச்சா நகரில் இருந்து ரஷ்ய துருப்புகள் பின் வாங்கிய பின்னரே, இந்த கொடூரங்கள் அம்பலமாகியுள்ளது.
அப்பாவி பொதுமக்கள் பெரும்பாலானோர் கைகள் கட்டப்பட்டு, கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் இராணுவமும் சர்வதேச ஊடக சமூகமும் புச்சா நகரில் நேரிடையாக சென்று பார்வையிட்டதுடன், ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனத்தை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்தியுள்ளனர்.