ஒன்லைன் விளம்பரத்தை நம்பி வேலைக்கு விண்ணப்பித்த நபருக்கு நேர்ந்த பயங்கரம்... இரத்தத்தை உறிஞ்சிய கடத்தல்காரர்கள்
சீனாவில், ஒன்லைன் விளம்பரம் ஒன்றை நம்பி வேலைக்கு விண்ணப்பித்த ஒருவர், உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில், வீடு திரும்பிய பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
சீனரான Li (32), ஒரு நிறுவனத்தில் செக்யூரிட்டி கார்டாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, இரவு விடுதி ஒன்றில் பவுன்சராக வேலை இருப்பதாக ஒன்லைன் தளம் ஒன்றில் கொடுக்கப்பட்டிருந்த விளம்பரம் ஒன்றைக் கண்ட Li, அந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.
நேர்முகத் தேர்வுக்காக சென்ற Liயை, கம்போடியாவிலுள்ள Sihanoukville என்ற இடத்துக்குக் கடத்திச் சென்ற ஒரு கூட்டம், அவரை மற்றொரு கூட்டத்திடம் 13,598 பவுண்டுகளுக்கு விற்றுள்ளது.
அந்த இரண்டாவது கூட்டம், Liயை பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபடுத்தியுள்ளது. அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, அவரை ஓரிடத்தில் அடைத்த அந்த கூட்டத்தினர், அவரிடமிருந்து மாதந்தோறும் இரத்தம் சேகரித்துள்ளனர். மருத்துவ நெறிமுறைகளின்படி ஒருவரிடமிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறைதான் இரத்தம் சேகரிக்கலாம். ஆனால், Liயிடமிருந்து அந்தக் கூட்டம் மாதந்தோறும் இரத்தம் எடுத்து விற்பனை செய்துள்ளது.
அத்துடன், இரத்த தானம் செய்வோரிடமிருந்து ஒரு முறைக்கு 16 அவுன்சுகள்தான் இரத்தம் சேகரிக்கலாம். ஆனால், Liயிடமிருந்து ஒவ்வொரு முறையும் 27 அவுன்சுகள் இரத்தம் உறிஞ்சப்பட்டுள்ளது. அவரது கைகளிலிருந்து இரத்தம் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டபோது, அவரது தலையிலிருந்து கூட இரத்தத்தை உறிஞ்சியதாம் அந்தக் கூட்டம்.
கடைசியில் எப்படியோ ஒருவழியாக அந்தக் கூட்டத்திடமிருந்து தப்பி வந்துள்ளார் Li.
அவரது கைகள் முழுவதும் இரத்தம் சேகரித்ததால் ஏற்பட்டுள்ள காயங்களுடன், அளவுக்கு அதிகமாக இரத்தம் எடுக்கப்படதால் உள்ளுறுப்புக்களும் பாதிக்கப்பட்ட நிலையில் தப்பிய Liக்கு உயிர் தப்பியது மட்டுமே லாபம்.
இது தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ள சீன அரசு, வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, மோசடி விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம் என்றும் முறையான சேனல்கள் மூலம் விண்ணப்பிக்குமாறும் மக்களை அறிவுறுத்தியுள்ளது.