ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு மேலும் ஒரு தலைகுனிவு: நடவடிக்கை எடுத்த அவுஸ்திரேலியா
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் காதலியான அலினா கபேவா மீது பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பின்னர் தற்போது அவுஸ்திரேலியாவும் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
ரஷ்யாவின் பிரபலமான ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான 39 வயது அலினா கபேவா மீது புதிதாக அவுஸ்திரேலியா அரசு தடைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒலிம்பிக் தங்க மங்கையான அலினா கபேவாவுக்கும் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் ரகசிய திருமணம் முடிந்துள்ளதாகவும், இரு பிள்ளைகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், சமீபத்தில் மூன்றாவது முறையாக அலினா கபேவா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது.
இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க, உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. கடந்த மே மாதம் கபேவா மற்றும் புடினின் முன்னாள் மனைவி லியுட்மிலா ஆகிய இருவருக்கும் எதிராக பிரித்தானிய அரசாங்கம் தடைகளை அறிவித்தது.
மட்டுமின்றி, விளாடிமிர் புடினுக்கு தொடர்புடைய அனைத்து வட்டாரங்களிலும் நடவடிக்கைகள் இறுகும் எனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், ஜூன் மாத தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்த நடவடிக்கையில் 1158 பேர்களின் பட்டியலில் கபேவாவும் இடம்பெற்றிருந்தார்.
தற்போது அவுஸ்திரேலியாவும் கபேவா மீது நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. கபேவா மட்டுமின்றி 16 ரஷ்ய பிரபலங்கள் மீது அவுஸ்திரேலியா தடை விதித்துள்ளது.
இதில் புடினின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.