உக்ரைனில் அழுகிக் கிடக்கும் ரஷ்ய வீரர்களின் உடல்கள்: ஊடகவியலாளர்கள் நேரில் கண்ட காட்சிகள்
உக்ரைனை எளிதாகக் கைப்பற்றிவிடலாம் என நம்பி வந்த ரஷ்யப் படைவீரர்களின் உடல்கள் அநாதரவாக அழுகிக் கிடக்கும் காட்சிகளை பிரித்தானிய ஊடகவியலாளர்கள் நேரில் சென்று கண்டு திரும்பியிருக்கிறார்கள்.
உக்ரைனிலுள்ள Mala Rohan என்ற பகுதியை ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்டுள்ளார்கள் உக்ரைன் வீரர்கள்.
அந்த பகுதிக்கு நேரில் சென்ற The Sun ஊடகத்தின் செய்தியாளர்கள், அங்கு தாங்கள் கண்ட பயங்கர காட்சிகளை விவரித்துள்ளார்கள்.
ரஷ்யப் படையினர், தங்களால் எளிதில் உக்ரைனை வென்றுவிட முடியும் என தப்புக்கணக்கு போட்டதால், நான்கு நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை மட்டுமே தங்களுடன் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பாராத வகையில் போர் நீண்டுகொண்டே செல்ல, பொதுமக்களுடைய வீடுகளுக்குள் புகுந்து, உணவுப்பொருட்கள் முதலானவற்றை அவர்கள் திருடத் துவங்கிவிட்டதாக தெரிவிக்கிறார் அப்பகுதியில் வாழும் விவசாயியான Zlobina Lubov (62) என்ற பெண்.
அத்துடன், அவரது கால்நடைப் பண்ணை மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதால், அவரது பண்ணையிலிருந்த 140 பசுக்கள், பன்றிகள் மற்றும் ஆட்டுக்குட்டிகள் தீயில் எரிந்து உயிரிழந்துவிட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
ஆனால், அப்படி அளவிலா அராஜகச் செயல்களில் ஈடுபட்ட அந்த ரஷ்யப் படையினர் அனைவரும் உயிருடன் திரும்பவில்லை. தங்கள் வீரர்களின் தாக்குதலில் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக உக்ரைன் வீரர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதற்கு சாட்சியமாக, ரஷ்யப் படைவீரர்களின் உடல்கள் அழுகிய நிலையில் கிடப்பதையும், ஆங்காங்கு அவர்களுடைய இராணுவ சீருடைகள், தலைக்கவசங்கள், வெடித்துச் சிதறிய போர் வாகனங்கள் கிடப்பதையும் ஊடகவியலாளர்கள் கண்டுள்ளார்கள்.
சில இடங்களில், தங்களை மறைத்துக்கொள்ள பாதுகாப்புக்காக ரஷ்யப் படையினர் உருவாக்கிய பதுங்குகுழிகளே அவர்களுக்கு சவக்கிடங்குகளாக ஆகியுள்ளன.
சில இடங்களில், ஆழமற்ற குழிகளைத் தோண்டி அவற்றிற்குள் மறைந்திருந்தவாறு தாக்கிய ரஷ்யப் படையினர், அந்த குழிகளிலேயே கொல்லப்பட, பாதி மண்ணுக்குள் புதைந்த அவர்களது உடல்கள் வெளியே தெரிகின்றன.
கொடூரம் என்னவென்றால், அவர்களில் சிலரது கண்களைப் பறவைகள் கொத்தித் தின்ற நிலையில், முகத்தில் கண்களுக்குப் பதிலாக வெறும் குழிகளே காணப்படுகின்றன.
தங்களுக்கு இப்படி ஒரு நிலை வரும் என அவர்கள் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.
இதற்கிடையில், Mala Rohan பகுதியை ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்டுள்ளதால், தாங்கள் ரஷ்யாவை தோற்கடித்துவிட முடியும் என்ற அசையாத நம்பிக்கையுடன் காணப்படுகிறார்கள் அங்குள்ள உக்ரைன் வீரர்கள்.
ஆனால், கடும் தோல்விகளை சந்தித்த ரஷ்யா, ரசாயன ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் மீண்டும் அச்சம் உருவாகியுள்ளது.