வேல்ஸ் வடக்கில் காணாமல் போன சிறுவன்: உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தீவிர விசாரணை!
வேல்ஸ் வடக்கில் காணாமல் போன சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்
வடக்கு வேல்ஸில் காணாமல் போன 16 வயது சிறுவன் அத்ருனைத்(Athrun) தேடும் பணி சோகமான முடிவுக்கு வந்துள்ளது.
தெற்கு குளோசெஸ்டர்ஷயரைச்(Gloucestershire) சேர்ந்த அத்ருன், விடுமுறையைக் கழிக்க வந்திருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கான்வியின் லாண்டட்னோவில் உள்ள வெஸ்ட் ஷோர் கடற்கரையில் நீச்சல் உடையுடன் கடைசியாகக் காணப்பட்டார்.
அவரைத் தேடும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அப்பகுதியில் ஒரு உடல் காணப்பட்டது.
தீவிரமான தேடல் பணி
இதனைத் தொடர்ந்து, கடலோர காவல்படை மற்றும் நீச்சல் வீரர்கள் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலை வரை தண்ணீரில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தேசிய பொலிஸ் விமான சேவை (NPAS) உட்பட பல்வேறு முகமைகளின் ஒருங்கிணைந்த தேடுதல் முயற்சிகள் புதன்கிழமை மாலையும் வெஸ்ட் ஷோர் பகுதியில் தொடர்ந்தன.
இந்நிலையில், வடக்கு வேல்ஸ் பொலிஸார் புதன்கிழமை மாலை 6:20 மணியளவில் ஒரு உடல் மீட்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட உடல் காணாமல் போன சிறுவனுடையதா என்பதை உறுதிப்படுத்தும் முறையான அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
எனினும், அத்ருனின் குடும்பத்தினருக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் அதிகாரிகள் அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் ஆதரவையும் வழங்கி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பொலிஸார், இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானதாகக் கருதப்படவில்லை என்றும், இது தொடர்பாக மரண விசாரணை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்தச் சோகமான செய்தி அப்பகுதியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |