35 சதவிகித ஊதிய உயர்வை நிராகரித்த போயிங் தொழிலாளர்கள்: தொடரும் வேலைநிறுத்தம்
நான்கு ஆண்டுகளில் 35 சதவிகித ஊதிய உயர்வு உட்பட போயிங் நிர்வாகம் முன்வைத்துள்ள சலுகைகளை வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் நிராகரித்துள்ளனர்.
30,000 தொழிலாளர்கள்
இந்த விவகாரம் தொடர்பில் IAM தொழிற்சங்கம் தெரிவிக்கையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களில் 64 சதவிகிதம் பேர்கள் போயிங் நிர்வாகம் முன்வைத்துள்ள சலுகைகளை நிராகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
போயிங் நிர்வாகம் தொடக்கத்தில் முன்வைத்த சலுகைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 13ம் திகதி முதல் 30,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போயிங் நிறுவனம் சுமார் 6 பில்லியன் டொலர் வரையில் இழப்பை எதிர்கொண்டு வருவதாக அதன் தலைவர் Kelly Ortberg எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே IAM தொழிற்சங்கம் சலுகைகளை நிராகரித்துள்ளது.
இந்த நிலையில், சமீபத்திய சலுகை நிராகரிக்கப்பட்டது குறித்து போயிங் நிறுவனம் இதுவரை பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் முறையான வாக்கெடுப்பில் போயிங் நிர்வாகம் முன்வைத்துள்ள சலுகைகளை நிராகரிப்பது இது இரண்டாவது முறையாகும்.
வெகுவாக பாதித்துள்ளது
கடந்த மாதம் போயிங் நிர்வாகம் முன்வைத்த சலுகைகளை 95 சதவிகித தொழிலாளர்கள் நிராகரித்தனர். போயிங் நிறுவனத்தின் சமீபத்திய நெருக்கடி என்பது ஜனவரியில் அதன் பயணிகள் விமானம் ஒன்றின் ஒரு பாகம் நடுவானில் வெடித்ததை அடுத்தே ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி தற்போதைய இந்த வேலைநிறுத்தமானது உற்பத்தியை வெகுவாக பாதித்துள்ளது. போயிங்கின் வணிக விமான வணிகம் கடந்த மூன்று மாதங்களில் 4 பில்லியன் டொலர் செயல்பாட்டு இழப்பை பதிவு செய்துள்ளது.
இருப்பினும், போயிங் நிறுவனம் உறுதியான நிலையில் இருப்பதாகவும், 5400 விமானங்களுக்கான உற்பத்தி அனுமதியை போயிங் பெற்றுள்ளதாகவும் அதன் தலைவர் Kelly Ortberg தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |