விமான விபத்தில் உயிர் தப்பிய ஐந்து பயணிகள்: அடுத்து காத்திருந்த திகிலூட்டும் விடயங்கள்
விமானத்தின் எஞ்சின்களில் ஒன்று செயலிழந்ததால், விமானம் ஒன்று, ஒரு காட்டுக்குள் தரையிறங்க நேரிட்டது.
விமான விபத்தில் உயிர் தப்பினாலும், அந்த விமானத்திலிருந்த ஐந்து பயணிகளும் திகிலுடனேயே 36 மணி நேரத்தை செலவிட நேரிட்டது!
விமான விபத்தில் உயிர் தப்பிய பயணிகள்
கடந்த புதன்கிழமை, பொலிவியா நாட்டிலுள்ள Baures என்னும் கிராமத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது.
அந்த விமானம் ட்ரினிடாட் தீவை நோக்கிப் புறப்பட்ட நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்துக்குள்ளாகவே அதன் எஞ்சின்களில் ஒன்று பழுதாகியுள்ளது தெரியவந்துள்ளது.
ஆகவே, வேறு வழியில்லாமல் பொலிவியாவிலுள்ள காடு ஒன்றில் விமானத்தை இறக்க நேர்ந்துள்ளது.
விமானம் பழுதுபட்டு விபத்துக்குள்ளாகும் நிலையிலிருந்து தப்பிவிட்டோம் என நிம்மதிப் பெருமூச்சு விட்ட அந்த விமானத்திலிருந்த ஆறு வயதுப் பையன் உட்பட ஐந்து பயணிகளும் விமானத்தைவிட்டு வெளியே வர, அவர்கள் கண்ட காட்சி அவர்களை திகிலடையச் செய்துள்ளது.
ஆம், அவர்கள் இறங்கியது சதுப்புநிலக் காட்டில் என்பதால், விமானத்துக்குள் தண்ணீர் நுழைய, விமானத்தின் மீது ஏறி உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள் ஐந்து பேரும்.
அவர்களுக்கு எதிரே பயங்கர முதலைகளும், மரங்களில் அனகோண்டா வகை பாம்புகளளும் அவர்களையே பார்த்துக்கொண்டிருக்க, ராட்சத கொசுக்கள் வேறு பிடுங்கி எடுக்க, தூங்க முடியாமல், பயத்துடனும் நடுக்கத்துடனும், இரண்டு இரவுகள், விமானத்தின் மேலேயே அமர்ந்துகொண்டிருந்திருக்கிறார்கள் அவர்கள்.
சுமார் 36 மணி நேரம் இப்படி திகிலில் கடந்த நிலையில், அவ்வழியே வந்த மீன் பிடி படகுகளின் ஒளியைக் கண்டு அவர்கள் சத்தமிட, அந்த மீனவர்கள் அவர்களை மீட்டு தங்கள் படகுகளில் ஏற்றிச் சென்று காப்பாற்றியுள்ளார்கள்.
சரியான உணவும் தூக்கமும் இல்லாமல் வாடியிருந்த அவர்கள் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த முதலைகள் அவர்களை தாக்கிக் கொல்லாதது ஆச்சரியம்தான் என அந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள் தெரிவித்தது மேலும் அதிர்ச்சியை உருவாக்கியது என்பது கூடுதல் தகவல்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |