ஆட்சியை தக்கவைக்க சதி... முன்னாள் ஜனாதிபதி ஒருவர் குற்றவாளி என தீர்ப்பு
இராணுவத்தால் ஆட்சியைக் கைப்பற்ற சதி செய்த வழக்கில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்தில் தக்க வைக்க
2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, தன்னை அதிகாரத்தில் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் சதித்திட்டத்தை முன்னெடுத்ததாக ஜெய்ர் போல்சனாரோ மீது குற்றம் சாட்டப்பட்டது.
தோல்வியைத் தொடர்ந்து தேர்தல் முடிவை நிராகரிக்க நாட்டில் கொந்தளிப்பான ஒரு இயக்கத்தைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது, நாட்டின் ஜனாதிபதியாக சில்வா பதவியேற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, ஜனவரி 2023ல், தலைநகரான பிரேசிலியாவில் வன்முறை கலவரங்களில் உச்சக்கட்டத்தை அடைந்தது.
போல்சனாரோ ஆதரவாளர்களால் அரசு கட்டிடங்கள், ஃபெடரல் நீதிமன்றம், நாடாளுமன்றம் என தாக்குதலுக்கு இலக்கானது. ஆனால் இந்த வன்முறைகளில் போல்சனாரோவுக்கு எவ்வித பங்கும் இல்லை என்றே அவரது சட்டத்தரணிகள் வாதிட்டு வந்தனர்.
போல்சனாரோ மற்றும் அவருக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் இணைந்து அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளையும் கட்டுப்படுத்த ஒரு திட்டத்தை வகுத்ததாகவும், ஜனாதிபதி சில்வாவிற்கு விஷம் அளிக்கவும் திட்டமிட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டர் டி மோரேஸை சுட்டுக் கொல்லவும் திட்டம் தீட்டியுள்ளனர். தற்போது இந்த விவகாரத்தில் 34 பேர்கள் மீது வழக்கு பாய்ந்துள்ளது. இதில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் உட்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று, பிரேசிலின் உச்ச நீதிமன்றத்தால் போல்சனாரோ உத்தியோகப்பூர்வமாக குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த முயற்சித்தது, ஆயுதமேந்திய குற்றவியல் அமைப்பை வழிநடத்தியது,
40 ஆண்டுகள் வரையில்
ஜனநாயக சட்டத்தின் ஆட்சியை வன்முறையில் ஒழிக்க முயற்சித்தது, அரசு சொத்துக்களை சேதப்படுத்தியது என ஐந்து குற்றச்சாட்டுகளில் போல்சனாரோ குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனால், 40 ஆண்டுகள் வரையில் போல்சனாரோ சிறை தண்டனையை அனுபவிக்க நேரலாம் என்றே கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை தண்டனை குறித்த தகவல்கள் வெளியிடப்படும்.
அவரது சட்டத்தரணிகள் மேல்முறையீடு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். தீவிர வலதுசாரி அரசியல்வாதியான போல்சனாரோ 2019 முதல் 2022 வரையில் பிரேசில் ஜனாதிபதியாக ஆட்சி செய்தார்.
தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முதல் பிரேசிலிய முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோ என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |