காபூலில் தாலிபான்களை குறிவைத்து கோர சம்பவம்: பலர் உடல் சிதறி பலி
காபூல் மசூதி ஒன்றின் வாசலில் தாலிபான்களை குறிவைத்து முன்னெடுக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அப்பவி மக்கள் பலர் உடல் சிதறி பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் உறுதி செய்துள்ளார். தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்தின் தாயாரின் நினைவு நாள் ஆராதனையின் போது ஈத்கா மசூதியை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உடல் சிதறி பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, குறித்த தாக்குதலில் தாலிபான்களில் எவரும் சிக்கவில்லை என்றே முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் எண்ணிக்கை ஏதும் தாலிபான்களால் வெளியிடப்படவில்லை. ஆனால், காபூலில் இத்தாலியர்களால் நடத்தப்படும் மருத்துவமனையில் நால்வர் காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை என்றே கூறப்படுகிறது. இருப்பினும், ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர், அவர்களுக்கு எதிரான ஐ.எஸ் குழுவினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.