உளவுத்துறை அதிகாரிகளால் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட கமலா ஹாரிஸின் கணவர்: வெளியான திக்திக் நிமிடங்கள்
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் கணவர் Doug Emhoff, உளவுத்துறை அதிகாரிகளால் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் கணவர் Doug Emhoff சென்றுள்ளார்.
இந்த நிலையில் சுமார் 2.18 மணியளவில் திடீரென்று அவரை சுற்றிவளைத்த உளவுத்துறை அதிகாரிகள், நாம் உடனே கிளம்ப வேண்டும் எனக் கூறி, அவரை அவசர அவசரமாக வெளியேற்றியுள்ளனர்.
குறித்த சம்பவத்தின் போது பள்ளியின் அருங்காட்சியகத்தில் சுமார் ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்துள்ளார். இந்த நிலையிலேயே அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து அவரது வாகனத்தில் புறப்பட்டு சென்றனர்.
ஆனால் அதன் பின்னர் வாஷிங்டன் பொலிசாரும் வெடிகுண்டு நிபுணர்களும், குறித்த பள்ளியின் மாணவர்கள் உட்பட அனைவரையும் வெளியேற்றிவிட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பின்னரே தகவல் வெளியானது, குறித்த பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அதனாலையே Doug Emhoff உளவுத்துறை அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனவும், அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் முன்னர் கருப்பின மக்களுக்கான 17 கல்லூரிகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை கிளப்பியிருந்த நிலையில் எஃப்.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி ஒரே மாதத்தில் மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அட்லாண்டாவில் ஒரு கல்லூரிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனிடையே, Doug Emhoff வெளியேற்றப்பட்ட பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதுவரை கைது நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.