டெல் அவிவ்-வியன்னா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: நடுவழியில் அவசர தரையிறக்கம்
Tel Aviv-Vienna flight makes emergency landing after Bomb threat: டெல் அவிவ்-வியன்னா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்
இஸ்ரேலின் டெல் அவிவ்வில் இருந்து ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற விமானத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவசர அவசரமாக பல்கேரியாவில் தரையிறக்கப்பட்டது.
ருமேனியா நாட்டின் வான்பரப்பை ஏர்பஸ் ஏ320(Airbus A320) ரக விமானம் நெருங்கி கொண்டிருந்த போது, விமான குழுவினர் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவசரகால நெறிமுறைகள் படி விமானத்தை பல்கேரியா நாட்டின் சோபியா சர்வதேச விமான நிலையத்தில் விமானிகள் தரையிறக்க முடிவு செய்தனர்.
பயணிகள் விமானம் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதி செய்வதற்காக பல்கேரியா நாட்டின் விமானப்படை போர் விமானம் ஒன்று உடன் பறந்து இறுதிவரை வழிநடத்தியதாக அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பயணிகள் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும் அதிலிருந்த 51 பயணிகள் மற்றும் 6 விமான நிலைய பணியாளர்கள் என அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், விமான நிலைய அவசர கால குழுக்கள் விமானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டலுக்கான காரணம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.